சென்னை: சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை கையாளத் தெரியவில்லை என பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரியான ராஜேஷ் தாஸ் அப்பிரிவிற்கே ஏடிஜிபி ஆக நியமிக்கப்பட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் புதிய சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக ராஜேஷ் தாஸ் ஐபிஎஸ்ஸை தமிழ்நாடு அரசு பணியிடமாற்றம் செய்துள்ளது. இவர் வணிகவரித்துறை செயலாளர் பீலா ராஜேஷின் கணவர் ஆவார். கடந்த 1989 ஆம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவைச் சேர்ந்த ராஜேஷ் தாஸ், ஐஜியாக பதவி உயர்வு பெற்று, சென்னை புறநகர் காவல் ஆணையர், கடலோர பாதுகாப்பு மற்றும் தென் மண்டல ஐஜி ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார். தற்போது பணியிடமாற்றம் செய்யப்பட்டதற்கு முன், அமலாக்கப்பிரிவில் ஏடிஜிபியாக அவர் பணியாற்றி வந்தார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு, தென்மண்டல ஐஜியாக இவர் இருக்கும் போதுதான், பசும்பொன் முத்துராமலிங்கம் குருபூஜையில் உதவி ஆய்வாளர் உட்பட ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்ட கலவரம், 5 பேர் கொல்லப்பட்ட பரமக்குடி கலவரம், முல்லை பெரியாறு விவசாயிகள் பிரச்சனை மற்றும் கூடங்குளம் அணுஉலை பிரச்சனை ஆகியவை நிகழ்ந்தன.
அப்போது பெரும் பரபரப்பான இப்பிரச்சனைகளை முறையாக கையாளவில்லை என குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், ராஜேஷ் தாஸை தமிழ்நாடு அரசு பணியிட மாற்றம் செய்தது. இவரது மனைவியும், வணிகவரித்துறை செயலாளருமான பீலா ராஜேஷ் மீதான சொத்து குவிப்பு புகாரை விசாரிக்க, மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்புதான் அனுமதி அளித்தது.
அப்புகாரில் பீலா ராஜேஷ், அவரது கணவர் ராஜேஷ் தாஸ் பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துகள் வாங்கப்பட்டு, முறையாக வருமான வரி கணக்கு காட்டாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இப்படி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய ஐபிஎஸ் அதிகாரியான ராஜேஷ் தாஸை, அண்மைக்காலமாகவே அதிகாரம் இல்லாத பொறுப்புகளான மாநில சமூக நீதி மற்றும் மனித உரிமை ஏடிஜிபி, அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி ஆகிய பொறுப்புகளில் மட்டுமே அரசு வைத்திருந்தது.
இந்நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை சரிவர கையாளத் தெரியவில்லை என பணியிட மாற்றம் செய்யப்பட்ட ராஜேஷ் தாஸ் ஐபிஎஸ், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது, காவல்துறை வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊழல் கண்காணிப்பு இயக்குநராக இருந்த டிஜிபி விஜயகுமார் ஓய்வுபெற இருப்பதால், அப்பொறுப்பிற்கு தற்போதைய சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஜெயந்த் முரளி மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நீட்: மாணவிகளின் ஆபரணங்களை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு