புதிய தொழில் கொள்கை, புதிய சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனக் கொள்கைகளை வெளியிடுதல், புதிதாக தொடங்கப்படும் தொழில் நிறுவனங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளுதல், ஏற்கனவே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்ட நிறுவனத்தின் செயல்பாட்டை தொடங்கி வைத்தல் உள்ளிட்ட தொழில் சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று நடைபெற்றது.
இதில், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், தொழில்துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம், சிறு குறு நடுத்தர தொழில்துறை செயலாளர், தொழில் வழிகாட்டி நிறுவன மேலாண்மை இயக்குநர் நீரஜ் மிட்டல், டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமான அரசு அதிகாரிகள், தொழில்துறையினர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், அடுத்த 4 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடிக்கு முதலீடுகளை ஈர்த்து, 20 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்ட ’புதிய தொழில் கொள்கை 2021’ ஐ முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார். இதன் மூலம், உற்பத்தித் துறையில் 15% வளர்ச்சியை அடையவும், 2030க்குள் உற்பத்தித் துறையின் பங்களிப்பை 30% உயர்த்திடவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்து, 20 இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிர்ணயித்து, ’புதிய சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் தொழில் கொள்கை 2021’ யும் முதலமைச்சர் வெளியிட்டார்.
புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்:
28,053 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 68,775 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், 28 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
மின் வாகனங்கள், காற்றாலை எரிசக்தி, மோட்டார் வாகன உதிரி பாகங்கள், நகர எரிவாயு விநியோகம், ஜவுளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
புதிய திட்டங்கள் தொடக்கம்:
3,377 கோடி ரூபாய் முதலீட்டில், 8 நிறுவனங்களின் தொழில் திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
திட்டங்களின் முழு விபரம்:
- திருவள்ளூர் மாவட்டத்தில் ஆயிரத்து 750 கோடி ரூபாய் முதலீட்டில், சுமார் 1,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான பிசியோ ஆட்டோமொபைல் மோட்டார் வாகன உற்பத்தி மையம்.
- 135 கோடி முதலீட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள ’ஏத்தர் எனர்ஜி’ நிறுவனத்தின் மின் வாகனம் மற்றும் பேட்டரி தயாரிப்பு தொழிற்சாலை.
- திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில், 500 கோடி ரூபாய் முதலீட்டில், ஜப்பானை சேர்த்த யன்மார் எஞ்சின் நிறுவனத்தின் தொழிற்சாலை.
- கோவை மாவட்டத்தில் 380 கோடி ரூபாய் முதலீட்டில், ZF வின்ட் எனர்ஜி நிறுவனத்தின் காற்றாலை கியர் பெட்டி உற்பத்தி தொழிற்சாலை.
- கோவையில் 29 கோடி ரூபாய் முதலீட்டில், கிருஷ்ணவேணி கார்பன் நிறுவனத்தின் இயந்திர கார்பன் ஆலை.
- திருவள்ளூர் மாவட்டத்தில் 292 கோடி ரூபாய் முதலீட்டில், NDR நிறுவனத்தின் சேமிப்புக் கிடங்கு. (The Free Trade & Warehousing Zones)
- திருவள்ளூர் மாவட்டத்தில் 50 கோடி ரூபாய் முதலீட்டில், கவுண்டர் மேசர்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் உற்பத்தித் தொழிற்சாலை.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் 270 கோடி ரூபாய் முதலீட்டில், AG & P நிறுவனத்தின் எரிவாயு நிரப்பு நிலையங்கள்.
இவற்றின் மூலம், 7,139 நபர்களுக்கு புதிதாக வேலைவாய்ப்புகள் உருவாகும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிப். 23இல் தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் தாக்கல்