லாப நோக்கத்தை கருத்தில் கொள்ளாமல் மக்களுக்கான சேவையை மட்டுமே எண்ணி செயல்படுபவை, அரசு பொதுத்துறை நிறுவனங்கள். அதில் மிகமுக்கிய பங்காற்றுவது போக்குவரத்துத்துறை. சாதாரண மக்களின் தேவையை எவ்வாறு மருத்துவம், கல்வித்துறைகள் நிறைவு செய்து வருகின்றனவோ, அவ்வாறே போக்குவரத்துத்துறை மூலம் மக்கள் பயன் பெற்று வருகின்றனர். ஆனால், தமிழ்நாடு அரசு கொண்டு வர முயற்சிக்கும் போக்குவரத்துத்துறை மாற்றங்களை பார்த்தால், அது இனி சேவைத்துறையாக தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான வழித்தடங்களில், சுமார் 22 ஆயிரம் பேருந்துகள் வரை இயக்கப்படுகின்றன. இதற்கான பராமரிப்பு, நிர்வாக பணிகளுக்காக 8 கோட்டங்கள் மற்றும் மண்டலங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஏற்கனவே 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பில் இயக்கப்பட்டு வருவதாக கூறப்படும் அரசு போக்குவரத்து கழகத்தை, அதனை சரிசெய்யும் நோக்கில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து, அவற்றை அரசு பேருந்துகளின் வழித்தடங்களில் இயக்கும் முடிவினை போக்குவரத்துத்துறை எடுத்துள்ளது.
ஊரடங்கு காலத்தில் பேருந்துகள் இயக்கப்படாததால், மேலும் அதிகமான இழப்பால்தான் அரசு இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்பட்டாலும், இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறும்போது, பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை தெரிவித்தார். "சேவை நோக்கத்தில் இயக்கப்பட வேண்டிய அரசு பேருந்துகளை விடுத்து, தனியார் பேருந்துகளை இயக்குவது ஒட்டுமொத்த போக்குவரத்துத்துறையையும் தனியார் மயப்படுத்தும் நோக்கமாகும்.
இதனால் குறைந்த வருமானம் கிடைக்கும் கிராமப்புற பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படாமல் போகும். மாணவர்கள், மூத்தக்குடிகள் உள்ளிட்ட சலுகைப் பயணிகளுக்கு அச்சலுகைகள் பறிக்கப்படும். மேலும் போக்குவரத்துத்துறையில் பணியாற்றும் ஊழியர்களின் வேலைக்கும் இது ஆபத்தாக முடியும். முற்றிலும் தனியார் நிறுவனங்கள் லாபம் பெறுவதற்கான நோக்கத்தில் இந்த செயல்பாடுகள் இருக்கின்றன" என்கிறார் பாலகிருஷ்ணன்.
ஏற்கனவே பேருந்துகளின் கூண்டு கட்டும் தொழிற்சாலை, தண்ணீர் பாட்டில்கள் தயாரிக்கும் ஆலை என ஒவ்வொன்றிலும் தனியார் ஊழியர்கள் படிப்படியாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது அரசு எடுத்துள்ள இந்த முயற்சி, பேருந்து சேவையை தனியாரிடம் கொடுத்து, அதன் நோக்கத்தையே சிதைத்து விடும் என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு அரசு இதை உடனடியாக கைவிட வேண்டுமென்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
இதையும் படிங்க: அரசு தற்காலிக பெண் ஊழியர்களுக்கும் 9 மாத பேறுகால விடுப்பு - அரசாணை வெளியீடு!