தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ரமேஷ் சந்த் மீனா, தனது மகள்கள் அனாமிகா மற்றும் அஞ்சலி ஆகியோர், இந்திய குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்றதற்காக சந்தித்து வாழ்த்து பெற்றார். மற்றொரு நிகழ்வில், தமிழ்நாட்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இந்திய காவல் பணி அதிகாரிகள் டாக்டர் பி.ஸ்னேகா பிரியா, டி.வி.கிரண் ஸ்ருதி ஆகியோர் பயிற்சியின் போது பெற்ற விருதுகளை முதலமைச்சரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
இதேபோல், கூடுதல் தலைமைச் செயலாளர்களாக பதவி உயர்வு பெற்ற விபு நய்யர், பணீந்திர ரெட்டி, எம்.சாய் குமார், டி.எஸ்.ஜவஹர் ஆகியோரும், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் ஜி.சுகுமார் மற்றும் சென்னைப் பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் எஸ்.கௌரி ஆகியோரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மேலும் இந்திய ஆட்சிப் பணி அலுவலர் நிலைக்கு உயர்வு பெற்ற பி. கணேசன், எம்.எஸ்.சங்கீதா, டி.கிறிஸ்துராஜ், மற்றும் ஆர்.பிருந்தாதேவி ஆகியோரும் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்நிகழ்வுகளின் போது அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், ஜெயக்குமார் மற்றும் பல்வேறு அரசுத்துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: தூய்மைப் பணியாளர்களுக்கு இடர்படி: மத்திய, மாநில அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு