சென்னை: வேப்பேரி பகுதியைச் சேர்ந்தவர் முரளி (50). இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். முரளி மக்கள் செய்தித் தொடர்பில் தமிழ்நாடு அரசு என்ற விளம்பரப் பிரிவில் கணினி வடிவமைப்பாளராகப் (கம்ப்யூட்டர் டிசைனர்) பணிபுரிந்துவந்தார். இந்த நிலையில் வேப்பேரி சாலையில் உள்ள முரளியின் வீட்டுப் பகுதிகளிலும் மழைநீர் தேங்கியிருந்தது.
நேற்று காலை (நவம்பர் 28) மழை நீரைக் கடந்துசெல்ல வீட்டில் உள்ள இரும்பு கேட்டைப் பிடித்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி முரளி தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனால் அவரின் குடும்பத்தார் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து தகவலறிந்து சென்ற வேப்பேரி காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர்.
அதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இரும்பு கேட்டின் பக்கவாட்டில் சென்றிருந்த மின்சார ஒயரிலிருந்து கேட்டில் மின்சாரம் பாய்ந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் உதவியாளர் கைது