நாடு முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாகப் பரவி வரும் நிலையில் தொற்று பரவலை தடுக்கும் விதமாக, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
மே 1ஆம் தேதி முதல், 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், தமிழ்நாடு அரசிடம் போதுமான அளவிற்கு கரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லாததால், உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி மூலம் கரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்தது.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு சுமார் 13 லட்சம் தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. எனவே, உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் மூலம் தடுப்பூசியை நேரடியாக இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்துள்ளது" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் கரோனா தடுப்பூசி வழங்கிட தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது. அதன்படி, ஐந்து கோடி கரோனா தடுப்பூசிகளை 90 நாள்களுக்குள் வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரியுள்ளது. மேலும் 5 கோடி தடுப்பூசிகளை வழங்கிட ஜூன் 5ஆம் தேதிக்குள் நிறுவனங்கள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது