சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீப் பானர்ஜி, பொறுப்பேற்ற பிறகு முதல் முதலாக இன்று (ஜனவரி 18) மதுரைக் கிளைக்கு சென்றார். அங்கு, சஞ்சீப் பானர்ஜிக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நீதிபதிகள் சுந்தரேஷ், கல்யாண சுந்தரம், தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் வழக்கறிஞர்கள் சங்க தலைவர், செயலாளர் உள்ளிட்டோர் வரவேற்று பேசினர்.
அதைத் தொடர்ந்து பேசிய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, வழக்குகளை விசாரித்து முடித்தவுடன் தீர்ப்பு எழுதுவதற்கு மூன்று முதல் நான்கு வேலை நாட்கள் எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார். 450 பக்கம் கொண்ட தீர்ப்பை கூட நான்கு நாட்களுக்குள் எழுதி முடித்து விடுவேன் என்றும் தாம் அனைவரும் ஒரே குழுவாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
கரோனா வைரஸ் தொற்றால் கடந்த சில மாதங்களாக பணிச்சூழல் மாறிவிட்டதாக குறிப்பிட்ட நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, வீடியோ கான்பரன்சிங் மூலமாக வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், இதுபோல் நடப்பது தனது வாழ்நாளில் இதுவே முதல்முறை என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், வழக்கறிஞர் என்ற முறையில் சிறப்பான பங்களிப்பை வழங்குவேன் என்றும் தானும் தமிழ்நாட்டின் குடிமகனாக இருப்பதில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்.