சென்னை: தலைமைச் செயலகத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், "இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழ்நாடு முழுவதுமுள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ளவர்களுக்கும் அரசு அறிவித்துள்ள பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.
20 மளிகைப் பொருள்கள்
இத்தொகுப்பில், பொங்கலுக்குத் தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருள்களும் அடங்கிய துணிப்பை (20 பொருள்கள் அடங்கிய தொகுப்பு), மொத்தம் ஆயிரத்து 88 கோடி ரூபாய் செலவில், இரண்டு கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்களுக்கு வழங்கப்படும்.
புதிதாக சேர்ந்த நெய்!
மேலும், இவற்றுடன் ஒரு முழு கரும்பும், முதன்முறையாக நெய் பாக்கேடும் சேர்த்து வழங்கப்படவுள்ளது. இந்த பரிசுத் தொகுப்புகள் முறையாக வழங்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் மண்டல வாரியாக கண்காணிப்புக் குழு அமைக்கப்படும்.
கடந்த 15 நாள்களில் குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்த 7.5 லட்சம் பேருக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு, அவர்களுக்கு பொங்கல் பரிசுப் பொருள்களும் வழங்கப்படும்.
கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள்
வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரை டெல்டா மாவட்டங்களில் பாதிப்பு குறைவாக உள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் வழங்குவது குறித்து முதலமைச்சர் முடிவு செய்வார். கடந்த அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் கூடுதலாக 100 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, கடந்த ஆட்சியை விட கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மழையில் நனைந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வது தொடர்பாக, அவற்றின் ஈரப்பதத்தை குறைக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம். அது குறித்து ஒன்றிய அரசிடமிருந்து தகவல் வந்த பின்னர், ஈரப்பதம் குறைந்த அளவு உள்ள நெல்லை கொள்முதல் செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும்.
பயோ மெட்ரிக் முறை
தமிழ்நாட்டில் பயோ மெட்ரிக் முறையைப் பயன்படுத்தி 97 விழுக்காடு மக்கள் நியாய விலைப் பொருள்களை பெற்று வருகின்றனர். அதேபோன்று இந்தப் பரிசுத் தொகுப்புகளையும் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 2 நாட்களுக்கு உணவுப்பொருட்களை இருப்பு வைத்துக்கொள்க - சென்னை மாநகராட்சியின் அன்பான வேண்டுகோள்