சென்னை: செவிலியர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உள்ளிட்ட பணிகளை வாங்கித் தருவதாகக் கூறி, சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், 72 லட்ச ரூபாயைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாகப் பாதிக்கப்பட்டவர்களான நிலாவேந்தன், விக்டர் ஆகியோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தனர்.
பின்னர் செய்தியாளரைச் சந்தித்த விக்டர், "பத்திரிகை துறையில் செய்தியாளராகப் பணியாற்றிவந்த நிலாவேந்தன் என்பவர் மூலமாக 2018ஆம் ஆண்டு அப்போதைய அமைச்சர் சி. விஜயபாஸ்கருடன் பழக்கம் ஏற்பட்டது.
ரூ. 7 லட்சம் முதல் 10 லட்சம் வரை
அப்போது, விஜயபாஸ்கரிடம் செவிலியர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர், மருத்துவர் போன்ற பணிகளைப் பெற்றுத்தர அவருக்கு தலா 7 லட்ச ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வழங்கிவந்தேன். இதில், பலருக்கும் அவர் வேலை அளித்துள்ளார். மேலும், பணிக்கான தொகையை விஜயபாஸ்கரின் உதவியாளர் வெங்கடேசனிடம் பணமாக வழங்கிவந்தேன்.
பின்னர், பணியைச் சரிவர முடித்து கொடுக்காததால் இது குறித்து விஜயபாஸ்கரிடம் கேட்டபோது உதவியாளர் வெங்கடேசனிடம் கேட்குமாறு தெரிவித்தார். மேலும், அந்த நேரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் நடந்துவந்ததால் விஜயபாஸ்கர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவருவதாக வெங்கடேசன் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, இருவரும் தனது செல்போன் அழைப்பை எடுக்காமல் 72 லட்ச ரூபாயைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டனர். இதனால், உடனடியாக விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரூ.14 கோடி ரூபாய் மோசடி - முன்னாள் அமைச்சர் மீது கேரள பெண் புகார்