சென்னை: வண்ணாரப்பேட்டை சரகத்திற்கு உள்பட்ட திருவொற்றியூர், புதுவண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை ஆகிய பகுதிகளில் அதிக அளவில் செல்போன் பறிப்பு, இருசக்கர வாகனத் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதாக காவல் துறையினரிடம் புகார்கள் குவிந்தன.
இதையடுத்து, வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் மேற்பார்வையில் தனிப்படை அமைத்து திருட்டில் ஈடுபட்டவர்களை பிடிக்கும் முயற்சியில் தனிப்படை காவல் துறையினர் ஈடுபட்டனர். இதில், செல்போன் பறிப்பில் ஈடுபட்ட திருடர்கள் காசிமேடு பகுதியில் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது.
நான்கு பேர் கைது
அதனையடுத்து காசிமேடு விரைந்த தனிப்படை காவல் துறையினர், அங்கிருந்த கார்த்திக் (19), ஜோசப் என்ற சூர்யா (19) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
மேலும், இதில் தொடர்புடைய இரண்டு சிறுவர்கள் திருத்தணியில் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து அங்கு சென்ற காவல் துறையினர் பதுங்கியிருந்த இரண்டு சிறுவர்களையும் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.
சிறையில் அடைப்பு
பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் தொடர் செல்போன் பறிப்பு, இருசக்கர வாகன திருட்டுகளில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர்கள் இருவரையும் சீர்திருத்தப்பள்ளியிலும், கார்த்திக், ஜோசப் ஆகிய இருவரையும் புழல் சிறையிலும் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஆதார் விவரங்களைக் கொண்டு பி.எப் பணம் திருட்டு: இ-சேவை மைய உரிமையாளர் கைது!