சென்னை: நுரையீரல் தொற்றால் ஒரு வாரமாக பாதிக்கப்பட்டிருந்த அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மு.அனந்தகிருஷ்ணன் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று(மே29) காலை உயிரிழந்தார்.
கணினியிலும், இணையத்திலும் தமிழ மொழியைப் பயன்படுத்துவதில் முயற்சி மேற்கொண்டு, வெற்றி பெற்றவர்களில் அனந்தகிருஷ்ணனும் ஒருவர். பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை எளிதாக்கிய ஒற்றைச் சாளர நடைமுறைக்கும் இவரே முக்கிய காரணமாக இருந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் பிறந்த அனந்தகிருஷ்ணன், கிண்டி பொறியியல் கல்லூரியில் கட்டட பொறியியல் பட்டம் பெற்று, அமெரிக்கா மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பொறியியல் மற்றும் முனைவர் பட்டங்களைப் பெற்றார்.
பின்னர், இந்தியா திரும்பிய அவர், டெல்லியில் உள்ள மத்திய சாலை ஆராய்ச்சிக் கழகத்தின் முதுநிலை அறிவியல் அலுவலராகவும், கான்பூர் ஐஐடியில் பேராசிரியராகவும் பணியாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் அறிவியல் ஆலோசகர், ஐ.நா சபையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தின் துணை இயக்குநர் மற்றும் இந்த மையத்திற்கான ஐ.நா. ஆலோசனைக் குழுவின் செயலர் ஆகிய உயர் பதவிகளை வகித்தார்.
பின்னர், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி வகித்த அனந்தகிருஷ்ணன், எப்போதும் இன்முகத்தோடு காட்சியளிப்பார். இவர், 4 புத்தகங்களையும் 90க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியள்ளார். அனந்த கிருஷ்ணனுக்கு 2002ஆம் ஆண்டில் இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.