இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், " ’கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் திண்ணையில் இருப்பதை தூக்கி மனையில் வை’ என்பதைப் போல கரோனா நோய்த் தொற்று சிறிதும் தணியாத சூழலில் குறிப்பாக, வரக்கூடிய ஓரிரு மாதங்களில் நோய்த் தொற்றின் விகிதம் பெருமளவு அதிகரிக்கக்கூடும் என அச்சப்படும் நிலையில், பள்ளிகளை இப்போது அவசரமாகத் திறந்து மாணவர்களையும், ஆசிரியர்களையும், பெற்றோரையும், பணியாளர்களையும் தெரிந்தே அபாயத்திற்கு உள்ளாக்கும் வகையில் அமைச்சரின் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஊரடங்கை நான்காம் கட்டமாக நீட்டிக்கப்படக்கூடிய செய்திகள் வந்து கொண்டிருக்கும் போது, அவசர அவசரமாகப் பள்ளிகளைத் திறக்கும் அமைச்சரின் முயற்சிகளுக்குப் பின்னால் இருக்கும் நிர்பந்தம் என்ன?
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் 'ஆதர்ஷ புருஷர்களாக' விளங்கும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியமே (CBSE) 10ஆம் வகுப்புத் தேர்வுகளை ஜூலை மாதத்தில் நடத்த முடிவெடுத்திருக்கும் போது, தமிழ்நாட்டில் மட்டும் தேர்வுகளை ஜூன் முதல் நாளே துவக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது?
பொதுப் போக்குவரத்துத் தொடங்கப்படுவதற்கான எந்த அறிவிப்பும், முன்னேற்பாடுகளும் இல்லாதபோது லட்சக்கணக்கான மாணவர்களைத் தேர்வு மையங்களுக்கு இன்றைய ஊரடங்கு சூழலில் எவ்வாறு அழைத்து வர முடியும்? எனவே, மாணவர்கள் நலன் கருதி 10ஆம் வகுப்பு தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் ” என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: கரோனா விலகும் வரை கல்லூரிகள் திறப்பு இல்லை - அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்