சென்னை : சென்னையைச் சேர்ந்தவர் சசிகாந்த் செந்தில். கடந்த 2009ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற இவர், தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில், துணை ஆட்சியர், மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார். கடந்த, 2019ஆம் ஆண்டு தன் ஐஏஎஸ் பதவியை சசிகாந்த் செந்தில் ராஜினாமா செய்தார்; தொடர்ந்து பாஜகவை விமர்சனம் செய்தும் வந்தார்.
இந்த நிலையில், சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் கட்சியில் இணையப் போவதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பன்முகத்தன்மை கொண்ட இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை தூண்கள் வரலாறு காணாத வகையில் தாக்குதலுக்குள்ளாகி வருவதாக நான் உணருகிறேன். வரக்கூடிய நாட்களில் இந்த தாக்குதல் அதிகரித்து இந்தியாவின் பன்முகத் தன்மை கடும் சோதனைகளை சந்திக்கும் என்று கருதுகிறேன்'
கடந்த 2019 ஆம் ஆண்டு, செப்.6 ஆம் தேதி எனது ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்யும் போது எழுதிய கடிதத்தில் இப்படி தான் எழுதினேன். இந்தியா சந்தித்து வரும் இத்தகைய ஆபத்துகளை எதிர்கொள்ள வழிவகையை கண்டடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே பதவியை ராஜினாமா செய்தேன்.
நான் ராஜினாமா செய்த இந்த ஒரு வருட காலத்தில், பல அற்புதமான மனிதர்களை சந்தித்தேன். இளைஞர்கள், மாணவர்கள், மக்களையும் நாட்டையும் நேசிக்கும் பலர் என்னோடு இணைந்து, குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில், உணர்வோடு கலந்து கொண்டனர். இந்த போராட்டங்களின் போது தான், நான் இருக்க வேண்டிய இடம் இது தான் என்பதை உணர்ந்தேன். இவர்கள் தோளோடு தோள் நின்று, நான் நம்பும் மதிப்பீடுகளுக்காக தொடர்ந்து போராட வேண்டும் என்று உணர்ந்தேன்.
நாடு இன்று சந்தித்துக் கொண்டிருக்கும் சிக்கல்களை எதிர்கொள்ள ஒரே வழி அனைவரையும் ஒன்றிணைப்பதே என்பதை உணர்ந்தேன். அரசியலமைப்புச் சட்டத்தை நேசிப்போர் அடுத்த தலைமுறைக்கு ஒரு நேசம் மிகுந்த இந்தியாவை விட்டுச் செல்வதற்கு ஒன்றாக கரம் கோர்க்க வேண்டியது காலத்தின் தேவை.
எனது இந்த இலக்கினை அடைய காங்கிரஸ் கட்சியோடு இணைந்து பயணிப்பது என முடிவெடுத்துள்ளேன். அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ள விழுமியங்களோடு நெருக்கமான ஒரு இயக்கமாக காங்கிரஸ் கட்சியை பார்க்கிறேன். காங்கிரஸ் கட்சி வேற்றுமையை வலியுறுத்தவில்லை. ஒருங்கிணைந்து செயல்படுவதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. அன்பையும் நேசிப்பையும் நம்புகிறது.
இந்தியாவும், உலகும் 21 ஆம் நூற்றாண்டில் எதிர்கொள்ளும் சவால்களை காங்கிரஸ் உணர்ந்துள்ளது. வரும் நாட்களில், நாட்டின் பல பகுதிகளுக்கும் பயணித்து காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதற்கும் அரசியல் அமைப்பு சட்டம் சொல்லும் செய்தியை மக்களிடம் எடுத்து செல்லவும் விளிம்புநிலை மக்கள் வாழ்வை மேம்படுத்தவும் என் உழைப்பை செலவிட முடிவு செய்துள்ளேன்.
பிரிவினைவாத சக்திகளுக்கு தமிழ்நாடு எப்போதும் சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறது. இந்த நிலை நீட்டிக்கச் செய்து, தமிழ்நாட்டில் பிரிவினைவாத சக்திகள் காலுன்றாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது எனது கடமை எனக் கருதுகிறேன்.
தமிழ்நாட்டு மக்களோடு அவர்களின் விழுமியங்களை காப்பதற்காக போராட வேண்டும் என முடிவெடுத்துள்ளேன். மக்களுக்காக பணி செய்வதையே நான் எப்போதும் விரும்பியிருக்கிறேன். காங்கிரஸ் கட்சியில் இணைந்த பின்னரும் அதையே தொடர்ந்து செய்வேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : 'எழுவர் விடுதலையை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்!'