ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், 106 நாட்களுக்குப் பிறகு கடந்த வாரம் பிணையில் வெளிவந்தார். விடுதலையான பின் முதன்முறையாக அவர் இன்று தமிழ்நாடு வந்தார்.
சென்னை விமான நிலையத்தில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் அவரை வரவேற்றனர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாட்டின் பல பகுதிகளில் இன்று சுதந்திரம் நசுக்கப்படுகிறது. சுதந்திரக் குரல்கள் நெரிக்கப்படுகின்றன. காஷ்மீரில் சுமார் 75 லட்சம் மக்களின் சுதந்திரம் மறுக்கப்பட்டிருக்கிறது. இந்த நாடு நம் அனைவரின் உரிமையை பறிக்கும் விதத்திலான வலதுசாரி பிற்போக்கு பாசிச அரசால் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. எனவே, தமிழ்நாட்டைப்போல் அனைத்து மாநில மக்களும் என்று இந்த அரசை எதிர்க்கத் துணிகிறார்களோ அன்றுதான் இந்தியா சுதந்திர நாடாக மாறும்.
சிறையில் அடைத்ததால் என் மன வலிமை சிறிதளவும் குறையவில்லை. நான் வீழ்வேன் என எண்ணிய அவர்களின் எண்ணம் ஈடேறவில்லை.
நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமடைந்து கொண்டிருக்கிறது. மத்திய பாஜக அரசு இந்தியாவை பள்ளத்தாக்கில் கொண்டுபோய் இறக்கியிருக்கிறது. இந்த அரசு நீடிக்கும் வரை இந்தியா பொருளாதாரத்தில் மீளும் என்ற நம்பிக்கையே வரவில்லை” என்றார்.
இதையும் படிங்க: பொருளாதாரம் பற்றி மத்திய பாஜக அரசுக்கு ஒன்றும் தெரியாது - சிதம்பரம் குற்றச்சாட்டு