அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை, அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் என மாற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதேபோல், தனியார் பொறியியல் கல்லூரிகளை நிர்வாகம் செய்வதற்காக ஏற்படுத்தப்படும் புதிய பல்கலைக்கழகத்திற்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. இதற்கு அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள் உட்பட பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இந்நிலையில், பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர்களும் அண்ணா பல்கலைக்கழகப் பெயரை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள், பல்கலைக்கழக வேந்தரும், ஆளுநருமான பன்வாரிலால் புரோகித்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
அந்த கடிதத்தில், “முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரால் 1978-இல் தொடங்கப்பட்ட முதல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், 42 ஆண்டுகளாக கல்விச்சேவை ஆற்றிவரும் பல்கலைக்கழகமாக இருப்பதோடு, உலகளவில் பெருமை பெற்றது அண்ணா பல்கலைக்கழகம். மேலும், பல்வேறு ஆராய்ச்சி பணிகளையும் பல்கலைக்கழகம் செய்து வருகிறது. இந்த சூழலில், பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றினால், அது பல்வேறு குளறுபடிகளுக்கே வழி வகுக்கும். ஆராய்ச்சி திட்டப் பணிகள் பெருமளவில் பாதிக்கும்.
எனவே, இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ” என வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: அரசு பள்ளிகளில் சேர்ந்த மாணவர் விவரங்களை அளிக்க ஆணை