கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த கடலூர் மாவட்டம், பெரியநெசலூரைச் சேர்ந்த மாணவி, கடந்த மாதம் 13ஆம் தேதி மரணமடைந்தார்.
மாணவியின் தாய் அளித்தப் புகாரின் பேரில், சந்தேக மரணம் என்ற பிரிவின்கீழ் சின்னசேலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரைக் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு சிபிசிஐடி காவல் துறையினருக்கு மாற்றப்பட்டு, தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட 5 பேரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதிமன்றம், கடந்த வாரம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து இவர்கள் 5 பேரும் ஜாமீன்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை என்பதால், ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி விவகாரத்தில் 10 நாட்களுக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்...சென்னை உயர்நீதிமன்றம்