தமிழ்நாட்டில் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பத்திரிகையாளர்கள் பலர் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் இணைச்செயலாளர் இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 'கடந்த 8ஆம் தேதி அன்று கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நாளிதழ் செய்தியாளர் டென்சன் (50) கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தார். அதே நாளில் மதுரையில் பிரபல நாளிதழின் முன்னாள் மூத்த பத்திரிகைப் புகைப்படக் கலைஞர், மதுரை செய்தியாளர் சங்கத் தலைவராக பணியாற்றிய நம்பிராஜன் (64) கரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
அடுத்த நாள் (மே 09) அன்று மதுரையில் பத்திரிகையாளர் சரவணன்(48), நேற்று (மே 11) கோயம்புத்தூரின் சூளுர் பகுதி மாலை பத்திரிக்கை செய்தியாளர் மணி (47) ஆகியோர் கரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இப்படி கடந்த நான்கு நாட்களில் தமிழ்நாட்டில் ஐந்து பத்திரிகையாளர்கள் கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது பெரும் வேதனையைத் தருகிறது. முன்களப் பணியாளர்களாக - கரோனா விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டு வரும் பத்திரிகையாளர்கள் கரோனா நோய்த் தொற்றுக்கு பலியாவது மிகப் பெரிய வேதனையைத் தருகிறது.
ஐந்து பத்திரிகையாளர்களின் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. மறைந்த பத்திரிகையாளர் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு நிவாரண நிதியுதவியை வழங்கிட வேண்டுகிறோம்' என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எரிபொருள் நிரப்பும் நிலையங்கள், வரி வரும் வழிகள் அல்ல - கமல் ஆவேசம்!