தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் குமார், மல்லிகா, லோகநாதன், தங்கவேல், கிருஷ்ணன் ஆகியோர். விவசாயிகளான இவர்கள் பந்ராஹள்ளி கே.கே.ஐ. கூட்டுறவுச் சங்கத்தில் நிலத்தை அடைமானமாக வைத்து கடன் கேட்டுள்ளனர். ஆனால், கடன்தர கூட்டுறவுச் சங்கம் மறுத்த நிலையில், சங்கத்திடம் கடந்த ஐந்தாண்டு கடன்தாரர்கள் பட்டியலை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் விவசாயிகள் கேட்டுள்ளனர்.
அவர்கள் தகவலைக் கொடுக்க மறுத்ததால், அதனைக் கண்டித்து விவசாயிகள் உண்ணாவிரதம் இருக்க முயன்றுள்ளனர். ஆனால், விவசாயிகள் ஐந்து பேர் மீதும் வழக்குப்போட்டு காவல் துறை ஐந்து நாள்கள் சிறையில் அடைத்துள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் இன்று சேப்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், ”நாங்கள் அனைவரும் அவரவர் நிலங்களை அடைமானமாக வைத்து கடன் கேட்டோம். 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுக்க முடியும் என அதிமுகவைச் சேர்ந்த கூட்டுறவுச் சங்கத் தலைவரான அன்பழகன் கூறினார். ஆனால் அவருக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் கடன் உடனடியாகக் கொடுக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஐந்தாண்டுகளில் எவ்வளவு கடன், சங்கத்தின் மூலம் கொடுக்கப்பட்டுள்ளது என ஆர்டிஐ மூலம் கேட்டோம். ஆனால், என்ன வழக்கு என்று கூட சொல்லாமல் எங்களை ஐந்து நாள்கள் சிறையில் அடைத்தனர்.
ஒரு ஏக்கருக்கு 50 ஆயிரம் வரை கடன் கொடுக்கலாம் என்ற விதி இருக்கையில், இரண்டரை ஏக்கர் நிலத்திற்கு கடன் கொடுக்க மறுக்கின்றனர். எங்களுக்கு முறையாக பயிர்க்கடன் வழங்க வேண்டும். எங்களுக்கும் எங்கள் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வேண்டும். அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் “ என்றனர்.
இதையும் படிங்க: உலக வங்கி நிதியில் புத்துயிர் பெறும் தமிழ்நாட்டின் அணைகள்!