சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், போதைப் பொருள் தடுப்புக்கான நடவடிக்கை " (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய உத்தரவிட்டுள்ளனர். அதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாகக் கண்காணித்து, கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்களைக் கைது செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் புனித தோமையர் மலை காவல் துறையினருக்கு ஆலந்தூர் எம்.கே.என். சாலையிலுள்ள, கரூர் வைஷ்ய வங்கி வளாக கட்டிடத்தில் உள்ள ஒரு அறையில் 3 நபர்கள் போதைப் பொருள் விற்பனை செய்வதாக தகவல் வந்தது.
3 பேர் கைது
அதன் அடிப்படையில் அங்கு சோதனை செய்த காவல்துறையினர், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நந்தகுமார் (23), சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த திருளாபதி (24), கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் (27) ஆகிய 3 பேரை இன்று (மார்ச் 17) கைது செய்தனர். அவர்களிடமிருந்து 56 கிராம் ஆம்பெட்டமைன் போதைப் பொருள், 3 செல்போன்கள், 1 சிறிய அளவிலான எடை இயந்திரம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து அவர்களிடம் விசாரணையில், போதை பவுடரை உடலில் செலுத்தி போதைக்காகப் பயன்படுத்தியும், போதைப் பவுடரை அருண்பாண்டியன் என்பவரிடம் இருந்து வாங்கி, விற்பனை செய்ததும் தெரியவந்தது. பின்னர், மூவரும் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பறிமுதல்
இது தொடர்பாக மேலும், போதைப் பொருள் கும்பலைச் சேர்ந்த அருண்பாண்டியன் என்பவரைப் பிடிக்கக் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து சென்னையில் பதுங்கி இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அருண்பாண்டியன் (30) என்பவரைக் கைது செய்தனர்.
மேலும், இது தொடர்பான வழக்கில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஒனரா அகஸ்டின், ஜெசின் சுக்குஉடி (27) என்பவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 60 கிராம் ஆட்டமெட்டமைன் போதைப் பொருள், ரூ. 52,000 பணம் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில், இவர்கள் வெளிநாடுகளிலிருந்து போதைப்பொருளை பெங்களூருக்கு கடத்தி வந்து, அங்கிருந்து சென்னையில் விற்பனை செய்தது தெரியவந்தது. பின்னர் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு பட்ஜெட் 2022-23 நாளை தாக்கல்!