சென்னை வண்ணாரப்பேட்டை பெருமாள் கோயில் தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் ஆட்டோ ஓட்டுநர் சரவணன். இவரது மனைவி சரஸ்வதி, வீட்டிலேயே டைலரிங் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விட்டு தனது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார் சரஸ்வதி. வீட்டில் ஏற்றி வைக்கப்பட்ட விளக்கு சாய்ந்து அருகிலிருந்து மின்சார கம்பி மற்றும் துணிகளில் தீ பற்றிக்கொண்டது. மளமளவென பற்றிய தீ கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சி அளித்தது. மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.