சென்னை ஆவடியில் உள்ள மத்திய அதிவிரைவு படை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குப்பை கழிவுகளை உரமாக்கும் அமைப்புகளை தமிழ்நாடு திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்பு குழுத் தலைவர் நீதிபதி மரு.ஜோதிமணி (ஓய்வு) ஆய்வு செய்தார். அங்கு அவர் குப்பைகள் எவ்வாறு தரம் பிரிக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது என்ற செய்முறைகளை ஆய்வு செய்து கேட்டறிந்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த நீதியரசர் மரு.ஜோதிமணி, ’குப்பைகளை கொடுப்பவர்கள் மக்கும் குப்பைகளையும் மக்காத குப்பைகளையும் தனித்தனியாக பிரித்துக் கொடுக்க வேண்டியது அவர்களின் கடமை. நகராட்சிகளில் அமலில் உள்ள இந்த சட்டம் கட்டாயமான ஒன்றாகும். குப்பைகளைப் பிரித்துக் கொடுக்கவில்லை என்றால் அபராதம் வசூலிக்கப்படும்.
மக்கும் குப்பைகளை தினந்தோறும் வசூல் செய்ய, வரும் வாரத்தில் ஒருநாள் புதன்கிழமை மக்காத குப்பைகளை மாநகராட்சி அலுவலர்கள் வசூல் செய்கின்றனர். மக்காத குப்பைகளால் யாருக்கும் எந்த தீங்கும் நேர்ந்துவிடாது. அதை நாம் வீட்டில் வைத்து இருக்கலாம். மக்கும் குப்பைகளில் விரைவில் துர்நாற்றம் வரும் என்பதால் அதை நான்கு மணி நேரத்தில் எடுக்க வேண்டும். அதனால் மக்கும் குப்பைகள் தினமும் எடுக்கப்படுகிறது. குப்பைகளை தரம் பிரித்து கொடுத்தால் நகராட்சிக்கு 60 விழுக்காடு வேலை குறைந்துவிடும்’ என்றார்.
முன்னதாக மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் ரவிச்சந்திரன், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலர்களுடன் நீதியரசர் மரு. ஜோதிமணி கலந்துரையாடினார்.