சென்னை மெரினா கடற்கரையில் கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான விவகாரத்தில், ஏற்கனவே இருந்த கடைகளை அகற்றிவிட்டு புதிதாக அமைக்கப்படவுள்ள 900 தள்ளுவண்டி கடைகளுக்கான டெண்டரை இறுதி செய்வது தொடர்பான வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி, எம்.எஸ். ரமேஷ் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
கடந்த முறை இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், 900 தள்ளுவண்டி கடைகள் அமைப்பதற்கான டெண்டரை ஏக்வாட், AIR சிஸ்டம்ஸ் ஆகிய இரு நிறுவனங்களுக்கும் தலா 450 கடைகள் வீதம் பகிர்ந்து அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
மூன்று மாதங்களில் 900 கடைகளையும் உற்பத்தி செய்து வழங்க வேண்டுமெனவும், கடைகள் உற்பத்தி செய்து வழங்குவதில் தாமதத்தை தவிர்க்க, தாமதமாகும் நாட்களுக்கு ஏற்றவாறு குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்கு மேல் தாமதமானால் கடையின் மதிப்பில் 10 சதவீத தொகையையும் அதிகபட்சமாக 15 நாட்களுக்கு மேல் தாமதமானால் 50 சதவீத தொகையையும் பிடித்தம் செய்து கொள்ளசென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தியிருந்தது.
இந்தநிலையில், இந்த வழக்கு இன்று (டிச. 14) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, AIR SYSTEMS சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சிலம்பண்ணன், உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனையை பின்பற்றி தங்களால் கடைகளை உரிய நேரத்தில் ஒப்படைக்க முடியாத நிலை உள்ளதால், கடைகள் விநியோகிக்கும் ஒப்பந்தத்தில் இருந்து தாங்கள் விலகிக்கொள்வதாக தெரிவித்தார். பின்னர், ஏக்வாட் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், நீதிமன்ற நிபந்தனையை பின்பற்றி மூன்று மாதத்தில் 900 தள்ளுவண்டி கடைகளை விநியோகிக்க தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கடைகள் விநியோகிப்பதற்கான உரிமையை ஏக்வாட் நிறுவனத்திற்கே முழுவதுமாக வழங்க உத்தரவிட்டு ஒரு மாதத்தில் 300 கடைகள் வீதம், மூன்று மாதத்திற்குள் 900 கடைகளையும் சப்ளை செய்ய வேண்டும் எனவும், தவறினால் ஏற்கனவே குறிப்பிட்டபடி அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
தொடர்ந்து, மாநகராட்சி சார்பில் ஆஜரான அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர். ராஜகோபால், புதிதாக அமைக்கப்படவுள்ள 900 தள்ளுவண்டி கடைகளை பொறுத்தவரை, ஏற்கனவே மெரினாவில் தொழில் செய்பவர்களுக்கு 60 சதவீதமும், புதிதாக கடை வைக்க விரும்புபவர்களுக்கு 40 சதவீதமும் பிரித்து வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். அதேபோல், ஏற்கனவே மெரினாவில் 2 முதல் 3 கடைகளை வைத்திருப்பவர்களை முறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், கடைகள் அமைக்க விரும்புபவர்களுக்கான விண்ணப்பம் வரும் 21ஆம் தேதி முதல் வழங்கப்படவுள்ளதாகவும் 2021 ஜனவரி 6ஆம் தேதி விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு அதன் பிறகு குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கீடு நடைபெறும் எனவும் கூறினார்.
இதையடுத்து, கடைகள் அமைப்பதற்கான அனுமதி வழங்குவதில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள், ஏற்கனவே உள்ள கடைகளை அப்புறப்படுத்துவதிலும் உரிய நடைமுறைகளை பின்பற்ற வேண்டுமென உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க...மருத்துவப் படிப்பு: நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு விரைவில் அறிவிப்பு!