கடந்த மாதம் தொழில்துறையை ஊக்குவித்து பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் மத்திய அரசு இரண்டு முறை மிகப்பெரிய அறிவிப்புகளை வெளியிட்டது. பெரும் பணக்காரர்களுக்கான உபரி வரி திரும்பப் பெறல், ஆட்டோ மொபைல் துறைக்கான ஊக்கச்சலுகைகள், பொதுத் துறை வங்கிகள் இணைப்பு உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகின. ஆனால் இவை போதிய அளவுக்கு பயன்தரவில்லை எனக் கருதப்பட்டது.
இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியும் வரலாறு காணாத அளவுக்கு 5% விழுக்காடாக வீழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மூன்றாவது முறையாக நேற்று செய்தியளர்களைச் சந்தித்தார். அப்போது ஏற்றுமதிப் பொருட்கள் மீதான வரிச் சலுகைகள் என்ற புதிய திட்டத்தையும் அறிவித்தார்.
அரசு 50 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை விட்டுக்கொடுக்கும் வகையில், ஏற்றுமதியை ஊக்குவிக்கும் இந்த புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார். மேலும் தொழில் துறையினருக்கு வங்கிகள் அதிக அளவில் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதற்காக செப்டம்பர் 19ஆம் தேதி டெல்லியில் பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுடன் ஆலோசனை செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துப் பேசிய தேசிய ஏற்றுமதியாளர்களின் கூட்டமைப்பின் பிராந்திய தலைவர் அஹமத், "மத்திய நிதியமைச்சரின் அறிவிப்புகள் மகிழ்ச்சியளிக்கும் வகையில் உள்ளது. வரிகளுக்கு தளர்வு அளிக்கும் வகையில் ரூ.50 ஆயிரம் கோடியை அரசு விட்டுக்கொடுக்கும் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும், சரக்கு மற்றும் சேவை வரிச் சலுகையை பெற மின்னணு முறை கையாளப்பட உள்ளது என்பது மேலும் ஊக்கத்தை தரும்.ஏற்றுமதி தொழில் விரிவடையும்" என்றும் கூறியுள்ளார்.