செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவை சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆகியோர் சந்தித்தார்கள்.
அப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தற்கு நன்றி கூறினர். அதேபோல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் திரைப்பட படப்பிடிப்பினை தொடங்க அனுமதி கோரி மனு அளித்தனர்.
அப்போது கரோனா தொற்று காரணமாக ஊரடங்கில் தவிக்கும் மக்களுக்கு உதவும் வகையில் ஃபெப்சி உள்ளிட்ட 20 சங்கங்கள் மூலமாக சேகரித்த ரூ 10 லட்சத்து 25 ஆயிரத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு கசோலைகளாக அளித்தனர். முதலமைச்சரின் பொது நிவாரண நிதி கணக்கில் சேர்க்கப்படும் என கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
பின் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம் தமிழ்நாட்டில் மூடப்பட்டிருக்கும் திரையரங்கங்களை திறக்க அனுமதி வழங்க வேண்டி மனுவினை அளித்தனர். பின் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள், ஏற்கனவே தாங்கள் அளித்த கோரிக்கையான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை மேற்கொள்வதற்கு அரசு அனுமதிவழங்கியதற்கு நன்றி தெரிவித்தனர்.
இதனையடுத்து கடம்பூர் ராஜூ நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் படப்படிப்பு பணிகளை தொடங்குவதற்கு அனுமதி வழங்க முதலமைச்சரின் கவனத்திற்கு இந்த மனு கொண்டுச்செல்லப்படும் என தெரிவித்தார்.
இதில் விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் பி.சின்னப்பன், திரைப்படத் தயாரிப்பாளர்கள் டி.சிவா, திரு.தேனப்பன், தசுரேஷ் காமாட்சி, ஜி.தனஞ்சேயன், விடியல் ராஜ், நடிகரும் தயாரிப்பாளர்களுமான மனோபாலா, ஜே.எஸ்.கே.சதீஷ்குமார், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.