சென்னை: தனியார் பள்ளி மாணவர்களை மாற்றுச்சான்றிதழ் இல்லாமல் அரசு பள்ளியில் சேர்க்கக் கூடாது என வலியுறுத்தி தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு பள்ளிக்கல்வி துறை ஆணையரிடம் மனு அளித்துள்ளது.
இதுகுறித்து தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் இளங்கோவன் கூறும்போது, “கரோனா தொற்று பாதிப்பு காரணமாக தமிழ்நாட்டில் கடந்தாண்டு 2020 மார்ச் 24 ஆம் தேதி முதல் தனியார் பள்ளிகள் இயங்கவில்லை. இதனால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம்.
தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடத்த கூடாது என உத்தரவிட வேண்டுமென ஆணையரிடம் வலியுறுத்தி உள்ளோம். கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தின் மூலம் மாணவர்கள் சேர்த்தால் பல்வேறு முறைகேடுகளுக்கு வழி வகுக்கும்.
குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் சேர்ந்த மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை வழங்க வேண்டும். தனியார் பள்ளி ஆசிரியர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால, அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
நகர் ஊரமைப்பு துறை அனுமதி பெறாமல் ஆயிரம் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்தாண்டு இதில் விலக்கு அளித்து 100க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி பெறப்பட்டது. கிராமப்புறங்களில் கட்டப்படும் பள்ளிகளுக்கு கிராம நிர்வாக அனுமதி பெறப்படுகிறது.
எனவே நகரமைப்பு துறையின் அனுமதி பெறாத பள்ளிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்துள்ளோம். ஆணையரும் அதனை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: 16ஆவது சட்டப்பேரவையின் முதலாவது கூட்டத்தொடர்: ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்