சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்தவர் சாம் ஜெபராஜ் (61). இவரது கல்லூரியில் நடக்கும் விழாவிற்கு, கல்லூரியின் முதல்வர் தில்லை நாயகி என்பவருடன் வேப்பேரியில் உள்ள ஆணையர் அலுவலகத்திற்கு காவல் ஆணையரை சிறப்பு விருந்தினராக அழைக்க ஆணையரிடம் பேச காத்திருந்தனர்.
அப்போது காவல் ஆணையர் இல்லாததால் சந்தேகத்திற்கிடமாக இவர் சுற்றித் திரிந்தபோது கூடுதல் ஆணையர் அவரை அழைத்து விசாரணை செய்தார். அப்போது தன்னிடம் உள்ள சாலைப் பாதுகாப்பு அலுவலர் என்ற பெயரில் உள்ள அடையாள அட்டையை அவர் காண்பித்துள்ளார். இதையடுத்து அடையாள அட்டையை வாங்கி பார்த்தபோது அது போலியான அட்டை என்பது தெரியவந்தது.
இதையடுத்து சந்தேகமடைந்த காவல் துறையினர் வேப்பேரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்படி சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த காவல் துறையினர் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தபோது போலியான ஆதார் அடையாள அட்டை என்பது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.
மேலும் அடையாள அட்டையை வைத்துக்கொண்டு வாகன ஓட்டிகளிடம் பணம் பறித்துள்ளரா அல்லது வேறு ஏதேனும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளரா என்று விசாரணை செய்துவருகின்றனர்.