சென்னை: பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளரைச் சந்தித்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஜெயவர்தன், "தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான பாசிச அரசு, அதிமுக தலைவர்களை ஒடுக்க வேண்டும்; நசுக்க வேண்டும். எனது தந்தை ஜெயக்குமார் மீது பொய் வழக்குகளைப் போட்டுள்ளனர்" என்று குற்றஞ்சாட்டினார்.
திமுக தலைமையிலான பாசிச அரசு தனது தந்தை ஜெயக்குமார் மீது பொய்ப் புகாரின்பேரில் கைதுசெய்யப்பட்ட நிலையில் நேற்றிரவு மேலும் ஒரு பொய் வழக்கைப் பதிவுசெய்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தனது தங்கைக்கு கணவரான நவீன் குமாருக்கு ஒன்பது சகோதரர்கள் இருக்கின்றனர் என்றார்.
மேலும், மகேஷ் குமார் - நவீன் குமாருக்கு இடையே தொழிற்சாலை குறித்து கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக உரிமை சார்ந்த வழக்கு இருக்கும் நிலையில், இதில் தனது தந்தைக்கும் பங்கு இருப்பதாகச் சென்னை மத்திய குற்றப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்திருப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.
அனைத்து வழக்குகளையும் சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், தனது தந்தையான ஜெயக்குமாரை போலீஸ் காவல் கேட்டு மனு தாக்கல்செய்த நிலையில் அடிப்படை ஆதாரமின்றி இருந்ததால் அதனை நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
"நாளை மறுநாள் தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் ஜெயக்குமார் கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. திமுக தலைமையிலான அரசு ஒடுக்க நினைத்தால் அதிமுக தொண்டர்கள் அதனை முறியடித்து திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும்" எனவும் அவர் தெரிவித்தார்.
திமுக வழக்கறிஞராக இருக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஆர். இளங்கோ வடசென்னையில் தனது தந்தை கள்ள ஓட்டு போடுவதற்காகப் பிடித்துக்கொடுத்த நரேஷ் ஏற்கனவே நீதிமன்றத்தில் குற்றவாளி என ஒரு வழக்கில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவர் ஒரு ரவுடி போன்று அந்தப் பகுதியில் செயல்பட்டுவருவதாகவும் ஜெயவர்தன் கூறினார்.
கள்ள ஓட்டு போட முயன்ற அவரை தனது தந்தை கட்சியினரிடமிருந்து மீட்டு காவல் துறையினரிடம் ஒப்படைத்ததாகவும், பின்னர் காவல் துறையினர் அந்த நபரை விடுவித்த நிலையில், அந்த நபர் தனது தந்தையைத் தாக்கவந்ததாகக் குறிப்பிட்ட அவர், தனது தந்தையின் கார் ஓட்டுநரைத் தாக்கியதாகத் தெரிவித்தார்.
சம்பவத்தன்று நரேஷ் வன்முறையில் ஈடுபட்ட காணொலி ஆதாரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டு உள்ளதாகவும், மேலும் ஜெயக்குமார் அவர்களது பிணை மீதான மனு வருகிற திங்கள்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட இருப்பதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: சென்னை மாநகராட்சியில் பிறப்புச் சான்றிதழ் வழங்குவதில் சிக்கல்