சென்னை: கோயம்புத்தூரில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று (ஆகஸ்ட் 10) சோதனை நடத்திவரும் நிலையில், அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும் சோதனை நடந்துவருகிறது.
அதன்படி, கோயம்புத்தூர், சென்னை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மொத்தமாக சுமார் 60 இடங்களில் சோதனை நடைபெறுகின்றன. அரசு ஒப்பந்தப் பணிகளில் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெறுகிறது.
இதனிடையே, சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் விடுதியில் எஸ்.பி. வேலுமணியிடம் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் விசாரணையில் ஈடுபட்டனர். இதன்காரணமாக, அங்கு அதிமுக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எஸ்.பி. வேலுமணிக்கு அச்சம் கிடையாது
இந்த வேளையில் செய்தியாளர்களைச் சந்தித்த, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் வழக்கறிஞருமான இன்பதுரை, "எஸ்.பி. வேலுமணி மீது தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில், இந்தச் சோதனை நடைபெற்றுவருகிறது. விடுதியில் சோதனை நடத்தும் அளவிற்கு இங்கு ஒன்றும் கிடையாது. தற்போது எஸ்.பி. வேலுமணி மீது புதிதாக வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இவற்றைச் சட்டப்பூர்வமாகச் சந்திக்கத் தயாராக உள்ளோம். இந்தச் சோதனையால் எஸ்.பி. வேலுமணிக்கு எந்த அச்சம் கிடையாது. அவரது அனைத்து நிறுவன முதலீடுகளின் கணக்குகளும் சரியாக உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: எஸ்.பி. வேலுமணி வீட்டில் சோதனை