சென்னை: சைதாப்பேட்டை ராஜிவ் காந்தி சிலை அருகே நீட் விலக்கு மசோதா உள்பட 13 சட்ட மசோதாக்களைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி முடக்கி வைத்திருப்பதாகக் குற்றம்சாட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று (ஏப்.28) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், "ஆளுநர் என்று சொல்லாமல் வெறும் ரவி என்று கூறலாம். அவருக்கு மரியாதை தர வேண்டும் என அவசியம் கிடையாது.
சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து கூறும்போது, கோமளவல்லி என்ற பெயரையே சொல்லி இருக்கலாம் என்று செல்வபெருந்தகையிடம் கூறினேன். அமித்ஷா பேச்சைக் கேட்டுக்கொண்டு ரவி அசைவற்று இருக்கிறார். தமிழர்களை பற்றி தெரிந்துகொள்ள, டெல்லியின் பழையத் தலைவர்களைக் கேட்டுப்பார். தமிழர்களுக்குத் தேவைப்பட்டால் அநாகரிகமாகவும் நடந்து கொள்ளத் தெரியும்.
தமிழ்நாடு நினைத்தால் ஒரு நிமிடத்தில் ரவியைத் தூக்கி எறிய முடியும். ரவியை ஒழிக்க நினைத்தால் எங்களால் விரைந்து செய்து முடிக்க முடியும், மு.க.ஸ்டாலின் ஆட்சிக்குக் கெட்ட பெயர் வந்து விடக்கூடாது என்பதால் பொறுமை காக்கிறோம்.
ஒரு வாரத்துக்குள் நீட் மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை என்றால் காங்கிரஸ் போராட்டம் தீவிரம் ஆகும். ரவியை ரயிலில் டெல்லி அனுப்பி வைத்துவிடுவோம். ஜல்லிக்கட்டு போராட்டம் போல், ஆளுநர் மாளிகை கதவைத் தாண்டி உள்ளே வரும் நிலை ஏற்படும்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உசிலம்பட்டியில் தீண்டாமையை கடைபிடிக்காத கிராமம் - ரூ.10 லட்சம் பரிசை வென்றது!