சேலத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து விரைவில் சட்டம் இயற்றப்படும் எனத் தெரிவித்தார். அவரின் இந்த அறிவிப்புக்கு டி.டி.வி. தினகரன், பாமக நிறுவனர் ராமதாஸ், ரா. முத்தரசன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் நமது ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில், 'பத்தாண்டுகளுக்கு மேலாக விவசாயிகள், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு, பூவுலகின் நண்பர்கள் உள்ளிட்ட சமூக அமைப்புகள், வணிகர்கள், பொதுமக்கள் ஆகியோர் காவிரி டெல்டா மண்டலத்தை பாதுகாக்கப்பட்ட விவசாய பகுதியாக அறிவிக்க கோரிக்கையை முன்வைத்துவந்தனர். முதமைச்சரின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
இது வெறும் அறிவிப்பாக மட்டும் இல்லாமல் விரைவில் சட்டவடிவம் பெறவேண்டும். தமிழ்நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக இந்த சட்டம் அமையும். போராடிய மக்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை அரசு திரும்பப் பெற வேண்டும். இந்த அறிவிப்பு செயல்வடிவம் பெறும் பட்சத்தில் பெறும் மாற்றத்தை நிச்சயம் ஏற்படுத்தும்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பொறியியல் மாணவர்களால் வானில் ஏவப்பட்ட துணை செயற்கைக்கோள்