சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த தடை கோரிய வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பொதுக்குழுவை நடத்த அனுமதி அளித்து தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டார். அதன்படி அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் வானகரம் தனியார் மண்டபத்தில் காலை 9.15 மணியளவில் தொடங்கி, பகல் 1 மணி வரை நடைபெற்றது.
எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், கே.பி.முனுசாமி ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர். முன்னாள் அமைச்சர்கள், தலைமைக் கழக செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வரவேற்புரையாற்றிய முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, எம்ஜிஆர் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலைப் போல, மாபெரும் சபை தனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும் என்பதை போல எடப்பாடி பழனிசாமிக்கு மாபெரும் வரவேற்பு கிடைக்கும் என்றும், "மாறாதய்யா மாறாது மனமும் குணமும்" போல சிலர் இருக்கிறார்கள். அதிமுகவை எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் நடத்த எடப்பாடியார் இருக்கிறார் என்றும் கூறினார்.
இதைத்தொடர்ந்து பேசிய தமிழ்மகன் உசேன், "புரட்சித் தலைவர்", "புரட்சித் தலைவி" என்று மறைந்த முதல்வர்களான எம்ஜிஆர், ஜெயலலிதாவை அழைப்பது போல், எடப்பாடி பழனிசாமியை "எழுச்சித் தலைவர்" என்று அழைக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் ரத்து - அதிமுகவின் நிரந்தர பொது செயலாளர் ஜெயலலிதா என்ற சட்டமும் ரத்து - துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இனிமேல் துணைப் பொதுச் செயலாளர்கள் என்று அழைக்கப்படும்,
4 மாதங்களில் அதிமுக உட்கட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக ஓபிஎஸ், ஜெ.சி.டி.பிரபாகர், வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன் ஆகிய நான்கு பேரையும் நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தை கண்டித்து, அக்கட்சி தலைவர்கள் உரையாற்றினர். அப்போது, குறுக்கிட்ட தொண்டர்கள் ஓபிஎஸ்-க்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான ஆர்பி உதயகுமார் ஓபிஎஸ்ஸை மறைமுகமாக கடுமையாக சாடினார்.
கட்டபொம்மன் பிறந்த மண்ணில்தான் எட்டப்பனும் பிறந்திருக்கிறார் என்று அவர் ஓபிஎஸ்ஸை தாக்கி பேசினார். மேலும் அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களும் இபிஎஸ் உடன் நிற்கின்றனர் என்றும் ஆர்பி உதயகுமார் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுகவின் ட்விட்டர் பக்கத்திலிருந்து ஓபிஎஸ் படம் நீக்கம்