ஏா்இந்தியா விமானம் (ஏஐ 1126) அமெரிக்காவின் சிக்காகோவிலிருந்து டெல்லி வழியாக நேற்றிரவு 7 மணிக்கு சென்னை சா்வதேச விமான நிலையம் வந்தது.
அந்த விமானம் மீண்டும் சென்னையிலிருந்து ஹைதராபாத் வழியாக சிக்காகோவிற்கு நேற்றிரவு 8.30 மணிக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டும். அதன்படி, 128 பயணிகள், 8 விமான ஊழியர்கள் மொத்தம் 136 பேருடன் விமானம் நேற்றிரவு 8.30 மணிக்கு சென்னை சா்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படத் தயாரானது.
விமானம் புறப்படுவதற்கு முன்பு விமானி இயந்திரங்களைச் சரிபாா்த்தபோது, இயந்திரக்கோளாறு ஏற்பட்டுள்ளதைக் கண்டுபிடித்தாா். இதையடுத்து, விமானம் காலதாமதமாகப் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. விமான பொறியாளா்கள் விமானத்தைப் பழுதுபாா்க்கும் பணியில் ஈடுபட்டனா்.
நள்ளிரவு 12 மணியாகியும் பணி முடியாமல் இருந்ததால், விமானத்திற்குள் இருந்த பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, விமானத்திற்குள்ளேயே போராட்டம் நடத்தினா்.
பின்னர், பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டு, விமான நிலைய பயணிகள் ஓய்வுப் பகுதியில் தங்கவைக்கப்பட்டனா். அதிகாலை 4 மணி வரை விமானத்தைச் சரிசெய்ய முடியவில்லை. இதையடுத்து, விமானம் ரத்து என்று அறிவிக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் சென்னை நகரில் உள்ள பல்வேறு உணவக விடுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.
விமானம் பழுதுபாா்க்கப்பட்டு இன்று மாலை 4 மணிக்கு மேல் மீண்டும் சென்னையிலிருந்து ஹைதராபாத் வழியாக அமெரிக்காவின் சிக்காகோ நகருக்குப் புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திரக்கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால் விபத்து தவிா்க்கப்பட்டு, 136 போ் நல்வாய்ப்பாக உயிா்தப்பினா்.