சென்னை சா்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா சிறப்பு விமானம் இன்று அதிகாலை புறப்படத் தயாரானது. அந்த விமானத்தில் 192 பயணிகள், ஏழு விமான ஊழியர்கள் என மொத்தம் 199 பேர் ஏறி அமர்ந்தனர்.
விமானம் ஓடுபாதையில் ஓட தயாராவதற்கு முன்னதாக விமானத்தின் இயந்திரங்களை விமானி சரிபார்த்தார். அப்போது விமானத்தில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டுள்ளதை கண்டுபிடித்தார்.
இந்தச் சூழலில், விமானத்தை இயக்கினால் ஆபத்து என்பதை விமானி உணா்ந்தார். இதையடுத்து விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாகத் தகவல் தெரிவித்தார்.
உடனடியாக விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டன. விமான பொறியாளா்கள் குழுவினர் விமானத்திற்குள் ஏறி விமானத்தைப் பழுதுபாா்க்கத் தொடங்கினர். பின்னர், விமானம் தாமதமாகப் புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, விமானம் ரத்து என்று அறிவிக்கப்பட்டது. விமானத்திலிருந்து பயணிகள் அனைவரும் கீழே இறக்கப்பட்டு உணவக விடுதியில் தங்கவைக்க அழைத்துச் செல்லப்பட்டனர்.
விமானம் இன்று மாலை அல்லது இரவு புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விமானி தகுந்த நேரத்தில் இயந்திரக் கோளாறை கண்டுபிடித்ததால், பெரும் விபத்து தவிா்க்கப்பட்டு நல்வாய்ப்பாக 199 போ் உயிா்தப்பினர். இந்தச் சம்பவம் சென்னை விமான நிலையத்தில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.