சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பின் ஆலோசகரான மேதா பட்கர், “நீர் மேலாண்மையை பாதுகாக்க வேண்டிய முக்கிய கடமை நமக்கு உள்ளது. எனவே மத்திய மாநில அரசுகள் நீர் மேலாண்மையை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் என்று கூறி குடிசை வீட்டில் உள்ள ஏழை எளிய மக்களின் வீடுகளையும் அகற்றுகின்றனர். ஆனால் பெரிய கட்டடங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற யாரும் முன்வரவில்லை. எனவே நீர்நீலைகளை ஆக்கிரமித்துள்ள பெரிய கட்டடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை வளங்களை பாதுகாக்க காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட பசுமை தீர்ப்பாயங்கள், அமைப்புகள் ஆகியவற்றை செயல்படவிடாமல் தற்போதைய அரசு தடுக்கிறது.
மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும். அப்போது தான் நிலத்தடி நீர் கிடைக்கும். தொழிலாளர்களுக்கு எதிரான நான்கு சட்ட வரைமுறைகளை மத்திய அரசு கொண்டு வர நினைக்கிறது. இந்த சட்ட வரைமுறைகள் கொண்டு வரப்படும் பட்சத்தில் தொழிலாளர்களின் நலன், உரிமைகள் பாதிக்கப்படும். எனவே அனைத்து மாநில அரசுகளும் அனைத்து தரப்பினரும் வரைமுறையை கொண்டு வரக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்” என்று கூறினார்.