சென்னை: தமிழ்நாட்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக வேட்பாளர்கள் (77 வேட்பாளர்கள்) போட்டியிடும் கரூர் தொகுதியில், வாக்கு எண்ணிக்கையின்போது தேர்தல் ஆணையம் கரோனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்ற வேண்டி, போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் அதிமுக வேட்பாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு இன்று (ஏப்.26) விசாரணக்கு வந்தது.
அந்த வழக்கை விசாரித்த அமர்வு, 'மக்கள் நலனுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதாக தெரியவந்தால், மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு தடைவிதிப்பதுடன், அதை ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி வைக்க உத்தரவிடுவோம்.
அரசியல் கட்சிகளின் துணை இல்லாமல் கள்ளச்சந்தையில் மருந்துகள் விற்க வாய்ப்பில்லை. உயிர் காக்கும் விவகாரத்தில் விஐபி கலாச்சாரம் இருக்கக்கூடாது. வென்டிலேட்டர், ரெம்டெசிவிர் ஆகியவை யாருக்கு தேவைப்படுகிறது என்பது குறித்து மக்களுக்கு பத்திரிகை, ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.
நேற்று (ஏப்.25) அரசு அறிவித்த முழு ஊரடங்கின்போது, வெளியில் வராமல் கட்டுப்பாடோடு இருந்த பொது மக்களின் பங்களிப்பு அளப்பறியது. கள்ளச்சந்தையில் உயிர் காக்கும் மருந்துகள் விற்கப்படுவது குறித்து புகார் வரும் வரை காத்திருக்காமல் மருந்து கட்டுப்பாட்டாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.