சென்னையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனையும் காவல் ஆய்வாளர், பத்திரிகையாளர் உள்ளிட்ட 13 பேருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லைக்கு ஆளாக்கிய வழக்கில் சிறுமியின் உறவினர், உடந்தையாக இருந்த காவல் ஆய்வாளர், தனியார் தொலைக்காட்சி செய்தியாளர், பாஜக பிரமுகர் உள்ளிட்ட 26 பேர் மீது போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் 22 பேர் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், இரு பெண்கள் உள்பட மற்ற 4 பேர் தலைமறைவாகிவிட்டனர். மீதமுள்ள 22 பேர் மீதான வழக்கு விசாரிக்கப்பட்ட நிலையில், ஒருவர் இறந்துவிட்டார்.
இந்நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் நீதிமன்றம், 8 பேருக்கு ஆயுள் தண்டனையும், 13 பேருக்கு கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 15 வயது சிறுமி பாலியல் தொல்லை வழக்கு;21 பேர் குற்றவாளிகள் - சென்னை போக்சோ நீதிமன்றம் அதிரடி