சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில், கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பில் 580 இடங்கள் உள்ளன.
மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொடுவளி உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக்கல்லூரியில், பி.டெக் உணவுத் தொழில்நுட்பப் பட்டப்படிப்பில் 40 இடங்கள் மற்றும் பால்வளத்தொழில்நுட்ப பட்டப்படிப்பில் கொடுவளியில் 20 இடங்களுக்கும், ஓசூர் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில், கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பிற்கான 40 இடங்களுக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
இந்தப் படிப்புகளில் சேர்வதற்கு https://adm.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் செப்டம்பர் 12ஆம் தேதி முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்றுடன் விண்ணப்ப தேதி முடிவடைந்த நிலையில், இந்த ஆண்டில் குறைவான மாணவர்களே விண்ணப்பித்திருப்பதாக புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.
பிவிஎஸ்ஸி ஏஎச் படிப்பிற்கு 13ஆயிரத்து 470 மாணவர்களும், பி.டெக் படிப்புகளுக்கு
2744 பேரும் என மொத்தம் இந்த ஆண்டு 16,214 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த 2020 மற்றும் 2021ஆம் ஆண்டைக் காட்டிலும் குறைவாகும். கடந்த 2020ஆம் ஆண்டு 15ஆயிரத்து 580 பேரும், கடந்த 2021ஆம் ஆண்டில் மொத்தம் 18,760 விண்ணப்பங்களும் பெறப்பட்டன.
இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் கல்வியாளர்கள் கால்நடை மருத்துவப்படிப்பிற்கு மாணவர்கள் மத்தியில் அதிக ஆர்வம் உள்ளது. எனினும் அது சார்ந்த படிப்புகளாக உள்ள கோழியினை ஆராய்ச்சி தொழில்நுட்பப் படிப்பு, உணவு தொழில் நுட்பம், பால்வள தொழில்நுட்பப் படிப்பு ஆகியவற்றிற்கு மாணவர்களிடம் அதிக ஆர்வம் இல்லை என தெரிவிக்கின்றனர்.
மேலும், ஏராளமான 12ஆம் வகுப்பு அறிவியல் பிரிவு பயிலும் மாணவர்கள், உயர் கல்வி சேருகின்ற பொழுது மருத்துவப் படிப்பையும், கலை அறிவியல் படிப்பையும் அதிகளவு விரும்புவதால் கால்நடை மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பம் குறைந்து வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: தசரா நாளில் ராவணனை வணங்கத் தயாராகும் பஞ்சாப் குடும்பத்தினர்