இது குறித்து பேசிய ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், ”அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு வயதை 58 லிருந்து 59 ஆக உயர்த்தியபோதே எதிர்ப்பு தெரிவித்தோம். தற்போது அதனை 60 ஆக உயர்த்தி அரசு அறிவித்துள்ளது. இதனால் படித்த இளைஞர்களின் அரசு வேலை வாய்ப்பு என்ற கனவு கலைந்து போகும். ஏற்கனவே நான்கரை லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில், ஓய்வு வயதை அதிகரிப்பதால், அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை மட்டுமே ஏற்படும்.
தற்போதுள்ள அரசின் காலமே மே மாதம் 24 ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், மே மாதம் 31 ஆம் தேதிக்கு பிறகு ஓய்வு பெறுபவர்களின் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தி அறிவிக்க இவர்களுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. மேலும் அரசியலமைப்பு சட்டத்திற்கு மாறாக கடைசி காலத்தில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. எனவே, அரசு இதனை திரும்பப்பெற வேண்டும். இல்லையெனில் தேர்தலுக்குப்பின் போராட்டம் நடத்துவோம்” என்றார்.
அதேபோல், தமிழ்நாடு வணிகவரி ஆணையர்கள் சங்க பொதுச் செயலாளர் சாமிநாதன் கூறும்போது, ”ஓய்வு வயது உயர்த்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். பதவி உயர்வுகள் வழங்கினால்தான், காலமுறை ஊதியம் அதிகரிக்கும். தற்போதைய புதிய அறிவிப்பால், பதவி உயர்வு வழங்குவது இரண்டு ஆண்டுகள் தடைபடும்” என்றார்.
இதையும் படிங்க: அரசுப் பணியாளர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்வு - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு