திருநெல்வேலி - தென்காசி மாவட்ட கழகங்களின் சார்பில் இன்று (நவம்பர் 25) நடைபெற்ற 'தமிழகம் மீட்போம்' - 2021 சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்பு பொதுக் கூட்டத்தில் காணொளி காட்சி மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசுகையில், "புயல் காரணமாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் புயல் பாதிப்பு இல்லை என்றாலும் 13 மாவட்டங்கள் இதன் பாதிப்புக்கு உள்ளாகும். அந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கழக தொண்டர்கள் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்து மதத்தைக் காப்பாற்ற அவதாரம் எடுத்தது போல் நடித்துக் கொண்டிருக்கும் சிலர், தங்களது கட்சியைக் காப்பாற்றிக் கொள்ளவே இந்து மதத்தை ஒரு கருவியாக பயன்படுத்துகிறார்கள். வளராத கட்சியை வளர்க்க, இந்து மதத்தைப் பயன்படுத்துகிறார்கள். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடியாம் தமிழ்ப் பெருங்குடி மக்கள் மனதில் வேற்றுமையை விதைத்துப் பிளவுபடுத்தப் பார்க்கிறார்கள்.
நவம்பர் 22ஆம் தேதி சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உரையை பத்திரிகைகளில் படித்தேன். மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் - திமுக கூட்டணி என்ன சாதனைகள் செய்தது? அதனை பட்டியலிட தயாரா என்று கேள்வி எழுப்பினார். அவர் இந்தியாவில்தான் இருந்தாரா? அல்லது பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு வேற்று கிரகத்தில் இருந்து குதித்தாரா என்று தெரியவில்லை.
மெட்ரோ ரயில் முதலாம் கட்ட பணிகளை தொடங்கியதே திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தான். 14 ஆயிரத்து 600 கோடி மதிப்பிலான மகத்தான திட்டத்தை தொடக்கி வைத்து 80 விழுக்காடு பணிகள் முடிக்கப்பட்டதே திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான்.
முதலமைச்சர் பழனிசாமி, ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர். துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சொத்து குவிப்பு வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர். இவர்களை வைத்துக் கொண்டு ஊழலைப் பற்றி பேசுவதற்கு அமித்ஷாவுக்கு என்ன அருகதை இருக்கிறது? ஊழல் வழக்கில் நான்காண்டு காலம் சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்ட ஜெயலலிதாவின் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டு ஊழலைப் பற்றி பேசுவதற்கு அமித்ஷாவுக்கு உரிமை உண்டா?
2016ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு தேர்தல் பரப்புரை செய்ய வந்த அமித்ஷா, 'இந்தியாவிலேயே ஊழல் மிகுந்தது ஜெயலலிதா ஆட்சி தான்' என்று கூறினார். அத்தகைய ஜெயலலிதாவின் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் பழனிசாமியை அருகில் வைத்துக் கொண்டு ஊழலைப் பற்றி பேச அமித்ஷாவுக்கு தகுதி இருக்கிறதா?" என்றார்.