சென்னை பெரியார் திடலில் பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் இன்றைய இந்திய பொருளாதாரம் பற்றி சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், ”பொருளாதார சரிவை இன்றுவரை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. சரக்கு மற்றும் சேவை வரி பெரு நிறுவனங்களுக்குதான் நன்மை தந்துள்ளது. பணவீக்க நடவடிக்கையும் இந்திய பொருளாதாரத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மந்த நிலைக்கு ஒரு காரணமாகும்.
ஒவ்வொரு நாளும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் சரிவை நோக்கிச் செல்கின்றன. லட்சக்கணக்கான வீடுகள் கட்டி விற்க முடியாமல் இந்திய பெரு நகரங்களில் உள்ளது. தற்போதைய பொருளாதார நிலைமையை நச்சு சைக்கிள் எனக் கூறலாம். பொருளாதாரத்தில் அனைத்து சரிவுகளும் ஒன்றோடொன்று தொடர்புடையது. வெளிநாட்டு முதலீடுகள் இந்திய பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறிவருகிறது.
அதன் விளைவே ரூபாய்க்கு எதிராக டாலர் மதிப்பு உயர்ந்து வருகிறது. தற்போதைய பொருளாதார வீழ்ச்சியை சரிசெய்ய இன்றுவரை சரியாக திட்டமிடுதல் மத்திய அரசிடம் இல்லை. சரக்கு மற்றும் சேவை வரியை உடனடியாக சரி செய்ய வேண்டும். ரிசர்வ் வங்கியிலிருந்து எடுக்கப்பட்ட பணத்தை வைத்து என்ன செய்யப் போகிறார்கள் என அச்சமாக உள்ளது.
ஆறு ஆண்டுகளாக எடுத்துவரும் தவறான பொருளாதாரக் கொள்கையே தற்போதைய மந்தநிலைக்கு காரணம். காங்கிரஸ், பாஜக இடையே பொருளாதார கொள்கையில் வேறுபாடுகள் இல்லை. இரண்டும் ஒரே நிலைப்பாடுதான் கொண்டவை. பொருளாதார சிக்கலை மக்கள் பிரச்சனையாக எந்த அரசும் எடுத்துக் கொள்ளவில்லை" எனத் தெரிவித்தார்.