சென்னை அடுத்த பல்லாவரம் மல்லிகாநகர் பகுதியில் மின்சாரம் விநியோகம் தடைப்பட்ட காரணத்தால் மின் கேபிள் பழுதுபார்க்க அப்பகுதியில் உதவிப் பொறியாளர் ஹரிகரன் தலைமையிலான மின்சார வாரிய ஊழியர்கள் பள்ளம் தோண்டியுள்ளனர்.
நள்ளிரவு 1 மணியளவில் அங்கு மின்சார வாரிய ஊழியர்கள் பள்ளம் தோண்டிக்கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த நித்தியானந்தம் (30) என்ற இளைஞர் மது அருந்திவிட்டு பள்ளம் தோண்டக் கூடாது எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அங்கு பணியிலிருந்த உதவி பொறியாளர் ஹரிகரனை தகாத வார்த்தையில் திட்டியதுடன், கொலை வெறியுடன் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
இதனால் மின் பழுதுபார்க்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனையடுத்து, இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், உதவிப் பொறியாளர் ஹரிகரனை தாக்கிய நபர் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காததால் 50-க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் பல்லாவரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல் நிலையத்தை மின்வாரிய ஊழியர்கள் முற்றுகையிட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பொதுமக்களின் நலன்கருதி பணிபுரியும் மின்சார வாரிய ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் அரசு ஊழியர்களிடையே கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : திருவள்ளுவர் சிலைக்கு தமிழ் அறிஞர்கள் மரியாதை...!