சென்னை: முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது ஏற்கெனவே லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர், ரூ. 811 கோடி டெண்டர் முறைகேடு விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து 60-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இந்த விவகாரத்தில் எஸ்.பி. வேலுமணி உட்பட 17 பேர் மீது (Disproportionate Assets Case) வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடந்த சோதனையின்போது சுமார் ரூ. 13 லட்சம் ரொக்கப் பணம் என்பது பறிமுதல் செய்யப்பட்டது.
சொத்துக்குவிப்பு வழக்கு
இந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி, லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 13 பேர் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்துள்ளனர். குறிப்பாக, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் அவரது சகோதரர்கள், சகோதரர்களின் மனைவி, நண்பர்கள் ஆகியோர் பெயரில் நடத்தப்படும் நிறுவனங்களில் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை சொத்துக்களாக செய்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
சொத்து பட்டியல்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 2016ஆம் ஆண்டு வேட்புமனு தாக்கல் செய்யும்பொழுது, தாக்கல் செய்யப்பட்ட சொத்துப்பட்டியல் மதிப்பு ஒரு கோடியே 3 லட்சத்து 99 ஆயிரத்து 27 ரூபாய் என உள்ளது. 2021ஆம் ஆண்டு வேட்புமனு தாக்கல் செய்யும்போது தாக்கல் செய்யப்பட்ட சொத்துக்களின் மதிப்பு 58 கோடியே 94 லட்சத்து 26 ஆயிரத்து 63 ரூபாய் என சொத்து மதிப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதில் 2016ஆம் ஆண்டிலிருந்து 2021ஆம் ஆண்டு வரை, வருமானம் ஒரு கோடியே 48 லட்சத்து 23 ஆயிரத்து 357 ரூபாய் எனத் தெரியவந்துள்ளது. மேலும் இந்த காலகட்டத்தில் செலவினங்கள் என பார்க்கும் பொழுது ஒரு கோடியே 83 லட்சத்து 93 ஆயிரத்து 373 ரூபாய் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
கணக்குக் காட்டப்பட்ட சொத்துக்களின் மதிப்பு மற்றும் செலவினங்களைக் கழித்துப் பார்க்கும் பொழுது, வரவை விட செலவினங்கள் சுமார் 33 லட்சத்து 70 ஆயிரத்து 16 ரூபாய் அதிகமாக செலவு செய்திருக்கிறார் என்பது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
முறைகேடு
இவ்வாறாக டெண்டர் முறைகேடுகள் மூலமாகவும், வரவை விட செலவினங்கள் 58 கோடியே 23 லட்சத்து 97 ஆயிரத்து 502 ரூபாய் சொத்துக்களைக் குவித்துள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது வருமானத்தைவிட சுமார் 3928% அதிகம் சொத்து சேர்த்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இவ்வாறாக, சம்பாதித்த பணத்தை வைத்து குற்றம்சாட்டப்பட்ட சந்திரசேகர் மற்றும் சந்திரபிரகாஷ் ஆகியோரது நிறுவனங்கள் மற்றும் உறவினர்கள் பெயரில் தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்களிலும் சொத்துக்களைக் குவித்து வைத்திருப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதப் பணத்தில் சுற்றுலா
முன்னால் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி 2019ஆம் ஆண்டு சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டு, 14 நாட்கள் தங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது. இதேபோன்று அமைச்சராக இருந்த நாட்களில் தாய்லாந்து, மலேசியா, மாலத்தீவு, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் 32 நாள் பயணம் செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. இதற்காக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 1.25 கோடி ரூபாய் செலவிட்டதும் தெரியவந்துள்ளது.
இவர்களைப் போன்றே முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் மனைவி வித்யா தேவி மற்றும் விகாஷ், சாரங்கி ஆகிய அவரது உறவினர்கள் 130 பல்வேறு நாடுகளுக்கு வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொண்டதும் தெரியவந்துள்ளது. சட்டவிரோதமாக சம்பாதிக்கும் பணத்தை வைத்து தமிழ்நாடு மற்றும் வெளிமாநிலங்களில் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்குச் செல்லும்போது சொத்துகளைக் குவித்து இருக்க முகாந்திரம் இருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.
போலி ஆவணங்கள்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் சகோதரர் அன்பரசன் மற்றும் அவரது மனைவி ஹேமலதா நடத்தும் செந்தில் அண்ட் கோ நிறுவனம் 2018ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை சுமார் ரூ.54 கோடி அளவில் பொருட்களை விநியோகம் செய்ததாக ஆவணங்கள் சமர்ப்பித்துள்ளனர். ஆனால், விசாரணை செய்தபோது அது போன்று எந்தவிதப் பொருட்களும் விநியோகம் செய்யப்படவில்லை என்பதும்; போலியாக ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, கணக்குக் காட்டப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
மேலும், 2020ஆம் ஆண்டு கன்ஸ்ட்ரானிக் இந்தியா மற்றும் வர்தன் உட்கட்டமைப்பு நிறுவனம் தலா இருபத்து ஒரு கோடி ரூபா மற்றும் 30 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததையும் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த இரண்டு நிறுவனங்களும் எஸ்.பி.வேலுமணியின் கூட்டாளி சந்திரசேகர் மற்றும் சந்திரபிரகாஷ் ஆகியோரின் பெயரில் தான் பெரும்பாலான பங்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.
ரூ.110 கோடியில் கே.சி.பி நிறுவனம்
இதனைப் பெற்ற பணத்தை எஸ்.பி. வேலுமணிக்குச் சொந்தமான கேசிபி நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதும் தெரியவந்துள்ளது. இதேபோன்று, சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்ட பணங்களில் பல்வேறு நிறுவனங்கள் மூலம் எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு, கணக்கு காட்டப்பட்டது போன்று பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்த கேசிபி நிறுவனத்தில் மட்டும் வைப்புத் தொகையாக ரூ.110 கோடி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சொகுசு விடுதி
இதேபோன்று, சிப்ரியான் என்ற சொகுசு ஹோட்டலை வாங்குவதற்கு 3 கோடியே 87 லட்சத்து 88 ஆயிரத்து 797 ரூபாய் எஸ்.பி.வேலுமணியின் கூட்டாளி சந்திரபிரகாஷின் சகோதரியான ராஜேஸ்வரி வங்கிக் கணக்கிலிருந்து எஸ்.பி.வேலுமணியின் உறவினர் சண்முகராஜா மற்றும் லோகநாதன் ஆகியோர் வங்கிக் கணக்கிற்குச் சென்றது தெரியவந்துள்ளது. ராஜேஸ்வரியின் கணவர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் உறவினர் லோகநாதன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தப் பணப்பரிவர்த்தனையும் சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட வருமானத்தின் மூலம் சேர்க்கப்பட்ட சொத்துகளாக இருக்கலாம் என லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜூவல்லரியில் போலிக் கணக்கு
மேலும் மகாகணபதி ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடையில் எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் அன்பரசன் மற்றும் அவரது மனைவி ஹேமலதா ஆகியோர் முக்கியப் பங்குதாரர்களாக இருந்து வருகின்றனர். கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் இந்த நகைக்கடை திருப்பூர், சேலம், பொள்ளாச்சி ஆகியப் பகுதிகளிலும் கிளைகளை வைத்திருக்கிறது.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் சுமார் ரூ. 292 கோடி அளவிற்கு நகைகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டிருப்பதாக கணக்குக் காட்டியுள்ளது. ஆனால், கணக்கு காட்டப்பட்ட அளவிற்கு விற்பனை நடைபெறவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மகாகணபதி ஜூவல்லர்ஸ் 2017-18 மற்றும் 2019-20 காலங்களில் 53 கோடி ரூபாய் அளவிற்கு நகைக்கடைக்கு தங்கம் உள்பட பல்வேறு பொருட்கள் வாங்கப்பட்டதாக பொய்யான கணக்கு காட்டப்பட்டு உள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். ஆனால், அந்த காலகட்டத்தில் சுமார் 10 கோடி ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருப்பதாகவும் பொய்யாகக் கணக்கு காட்டியுள்ளனர்.
இவ்வாறாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை இந்த நகைக்கடை மூலம் வருமானத்துக்குப்போட்டதுபோல், கணக்குக்காட்டி இருப்பதும் தெரியவந்துள்ளது. முக்கியமாக அன்பரசன் மற்றும் ஹேமலதா சுமார் 10 கோடி ரூபாய்க்கு இந்த நகைக்கடை மூலம் கிடைக்கப்பெற்ற பணத்தை வைத்து சொத்துகளைக் குவித்து இருப்பதும், எஸ்.பி. வேலுமணி சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தைச் சொத்துக்களாக மாற்றியதில் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.
நீளும் புகார்கள்
அத்துடன் எஸ்.பி.வேலுமணி, 1991ஆம் ஆண்டிலிருந்து 2001ஆம் ஆண்டு வரை பதிவு செய்யப்பட்ட ஒப்பந்ததாரராக இருந்து வந்துள்ளார். அதன்பிறகு செந்தில் அண்ட் கோ என்ற நிறுவனத்தின் பங்குதாரராக இருந்த எஸ்.பி. வேலுமணி, அதிலிருந்து 2001ஆம் ஆண்டுக்குப் பிறகு பதவி விலகினார். அதன்பின் இந்த நிறுவனமானது எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் அன்பரசன் மற்றும் மனைவி ஹேமலதா ஆகியோர் 50% பங்குதாரர்கள் அடிப்படையில் தொடர்ந்து இயங்கி வருகிறது.
மேலும், மகாகணபதி ஜூவல்லர்ஸ் நகைக்கடை 99 விழுக்காட்டுப் பங்குதாரர்கள் என்ற அடிப்படையில் அன்பரசன் மற்றும் ஹேமலதா நடத்தி வருகிறார்கள். மேலும் KM டெக்ஸ்டைல்ஸ் மற்றும் கோவை பார்ட்யூன் ஏஜென்சிஸ் ஆகிய நிறுவனத்தின் பங்குதாரராக அன்பரசன் இருந்து வருகிறார்.
இதையும் படிங்க: சுற்றுலா செல்ல ரூ.1.25 கோடி செலவு செய்த எஸ்.பி.வேலுமணி : லஞ்ச ஒழிப்புத்துறை