சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (51), இவர் எழும்பூர் குழந்தை நல அரசு மருத்துவமனையில் லிஃப்ட் ஆப்ரேட்டராக வேலைப்பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை அவர் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் டீ வாங்க வந்தபோது, எதிரே ஜீப்பில் வந்த காவலர் பாலாஜி மீது மோதியுள்ளார். இந்த விபத்தில் கால் முறிந்து ரத்தவெள்ளத்தில் பாலாஜி கிடந்துள்ளார்.
இதுகுறித்து அப்பகுதியினர் காவலரை மடிக்கி விபத்து குறித்து கேட்டபோது, குடிபோதையில் இருந்த அவர் பொதுமக்களிடம் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காவலரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதுபற்றி தகவலறிந்த அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாலாஜியை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் பொதுமக்களிடம் இருந்து காவலரை மீட்டனர். அவர் ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் உள்ள காவல் ஆய்வாளர் மணிகண்டன் என்பது தெரியவந்தது.
பின் காவல்துறையினர், மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.