தமிழ்நாட்டு மக்களுக்கு தமிழ் மொழி ஒரு மிகச் சிறந்த அடையாளம். இதற்கு நிகராக இன்னொரு சிறப்புமிக்க அடையாளமாக தமிழர்கள் கருதுவது திருக்குறளைதான். கல்விப் பாடத்திட்டத்தில், அரசாங்க அலுவலகங்களில், பேருந்துகளில் என ஒவ்வொரு தமிழரும் ஏதாவது ஒரு இடத்தில் திருக்குறளை கடந்தே வருகின்றனர். இதனால் திருக்குறள் தமிழர்களுக்கு மட்டும்தான் என்று கூற முடியாது. திருக்குறளில் கூறப்பட்டுள்ள கருத்துகள் அனைவருக்குமானது. நாடு, மொழி, மதம், இனம் உள்ளிட்டவற்றை கடந்தே திருக்குறள் இயற்றப்பட்டுள்ளது. அதனால்தான் அது உலகப் பொதுமறை என்றும் அழைக்கப்படுகிறது.
இதன்மூலம் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரும் மொழி, மதம், இனத்தைக் கடந்தவர் என்றே போற்றப்படுகிறார். அதேபோல் திருக்குறளுக்கு, திருவள்ளுவர் கடவுள் வாழ்த்து எழுதவில்லை என்றும், எழுதப்பட்டுள்ள கடவுள் வாழ்த்திலும் கடவுள் என்ற வார்த்தை எங்கும் குறிப்பிடபடவில்லை என்றும் சில அறிஞர்கள் கூறுகின்றனர். திருவள்ளுவர் தமிழ் மொழியை சார்ந்தவர் என்பதை தவிர அவரை வேறெந்த வட்டத்திலும் அல்லது வர்க்கத்திலும் அடக்க முடியாது என்பதே உண்மை.
ஆனால் திருவள்ளுவர் இந்து மதத்தை தழுவியே திருக்குறளை இயற்றினார் என்று பாஜக, இந்துத்துவ சக்திகள் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் காவி உடை அணிந்து திருநீர் பட்டை பூசி இந்து மதத்தைச் சேர்ந்தவர் போல சித்தரிக்கப்பட்ட படம் ஒன்று சமீபத்தில் பதிவிடப்பட்டிருந்தது. உலகத்துக்கே சமத்துவத்தைப் போதித்த திருவள்ளுவரை இந்து முனிவர் போல் சித்தரித்திருப்பதை அனைத்து ஜனநாயக சக்திகளும் வன்மையாக கண்டித்தன.
திருவள்ளுவர் மீது சாதி, மத அடையாளங்களை பூசாமல் அனைவருக்குமானவராக காத்து வந்ததில் திராவிடர் கழகத்திற்கு மிகப் பெரிய பங்குள்ளது. அந்த வகையில் திருவள்ளுவரை இந்து மதம் சார்ந்தவரைபோல் சித்தரித்துள்ள பாஜகவின் நடவடிக்கை குறித்தும் திருவள்ளுவர் யார் என்பது குறித்தும் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றனிடம் கேட்டோம்.
அவர் நமது ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த பிரேத்யேக பேட்டியில், “திருவள்ளுவர் திருக்குறள் மூலம் அறநெறி கருத்துகளை எடுத்துச் சொன்னவர். அவர் எந்த மதத்தையும் சேர்ந்தவரல்ல என்று அனைத்து தரப்பினரும் பெருமையாக கூறுவது வழக்கம். இன்னும் சொல்லப்போனால் மொழி, நாடு, இனம் ஆகியவற்றை கடந்த உலக மானுடத்துக்கே தேவையான அறவழி கருத்துகளை கூறிய நெறி நூல் என்று அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட நூல் திருக்குறள்.
இந்த சூழலில் திருவள்ளுவருக்கு காவி வேடம் தரித்து, நெற்றியில் பட்டை போட்டு அவரை இந்துமதவாதியாக காட்டுவது மோசடியான ஏற்பாடு. அப்படியே பார்த்தாலும் இவர்களுடைய இந்து மதத்தில் கூறப்பட்டுள்ள கொள்கைக்கும், திருவள்ளுவரால் கூறப்பட்டுள்ள கருத்துகளுக்கும் இடையில் இருக்கக்கூடிய முரண்பாட்டை பற்றி பேச வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. தமிழில் இவ்வளவு சிறப்பான நூல் இருப்பதையும், அதை திருவள்ளுவர் கூறியது என்பதையும் கொச்சைப்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் உள்நோக்கம்.
அவர்கள் தமிழ் என்றால் நீஷ பாஷை, சமஸ்கிருதம் என்றால் தேவ பாஷை என்று கருதக்கூடியவர்கள். கீதை, மனுதர்மம், ராமாயணம், மஹாபாரதம் உள்ளிட்டவற்றை சிறப்பான நூல்கள் என்று கருதுபவர்களுக்கு திருக்குறள் உலகளவில் பெருமையாக பேசப்படுவது ஒரு இடற்பாடாக இருக்கிறது.
இதனால்தான் திருக்குறளுக்கும் திருவள்ளுவருக்கும் எந்தவொரு தனித்தன்மையும் கிடையாது. எங்களுடைய இந்து மதத்தை சேர்ந்த ஒருவர் கூறிய கருத்துதான் என்று அவர்கள் கூறுகிறார்கள். மனுதர்மத்தின் சாரம்தான் திருக்குறள் என்று ஏற்கெனவே நாகசாமி போன்றவர்கள் சொல்லியிருக்கின்றனர்.
பிறப்பின் அடிப்படையில் பேதம் நான்கு வர்ணம் என்பதுதான் இந்து மதத்தின் அடிப்படை சாரம். ஆனால் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்னவர் திருவள்ளுவர். பிறப்பின் அடிப்படையில் பேதம் கற்பிக்கின்ற ஒரு தத்துவத்தையும், பிறப்பில் எந்த பேதமும் கிடையாது அனைவரும் சமம் என்று சொல்லுகின்ற வள்ளுவரின் தத்துவத்தையும் ஒன்றாக குழப்புவது போன்ற திரிபுவாதம் ஏற்படுத்துவதே இந்துத்துவவாதிகளின் அடிப்படை கருத்தாக இருக்கிறது.
நான்கு வர்ணத்தையும் சனாதனத்தையும் எதிர்த்த கெளதம் புத்தரையே மஹாவிஷ்ணுவின் அவதாரம் என்று சொன்னவர்கள் எப்போதுமே தங்களுக்கு எதிராக இருக்கக்கூடிய கருத்துகளை இருட்டடிப்பு செய்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில்தான் திருவள்ளுவரையும் தங்களுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவருவதற்கான முய்ற்சிகளை மேற்கொள்கின்றனர்.
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் பாஜக, ஆர்எஸ்எஸ், சங் பரிவார் அமைப்புக்களுக்கு ஒரு அடிப்படை என்பதே இல்லை. எனவே தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் திருக்குறளுக்கு ஈர்ப்பு இருக்கிறது என்பதால் இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
’நான் திருக்குறளை மிகவும் மதிக்கக்கூடியவன் திருவள்ளுவர் சிலையை கங்கை கரையில் கொண்டுபோய் நிறுவப் போகிறேன்’ என்று தருண் விஜய் என்கிற நாடாளுமன்ற உறுப்பினர் கூறி சிலை நிறுவியபோது கங்கை கரையில் ஆதிசங்கரர் என்கிற பிராமணருக்கு பக்கத்தில் சூத்திரர் சிலை நிறுவுவதா என்று இந்துத்துவ சக்திகளின் எதிர்த்தார்கள். அதன் காரணமாக ஒரு ப்ளாஸ்டிக் பையில் திருவள்ளுவர் சிலையை கட்டி ஏதோ ஒரு இடத்தில் வைத்தார்கள். அதைக் கண்டித்து இப்போது திருவள்ளுவருக்கு காவி வேடம் போட்டுள்ளவர்கள் குரல் கொடுத்திருக்கிறார்களா என்றால் அப்படி எதுவும் செய்யவில்லை. ஆகவே இது திருவள்ளுவரை சிறுமைப்படுத்துகின்ற பார்ப்பனிய நோக்கம்தான் என்பதே எங்களுடைய பார்வை.
திருக்குறளில் அதிகாரத்தை பிரித்தது வள்ளுவர் இல்லை. ஆரம்பத்தில் ஓலச்சுவடிகளாக இருந்ததை முறைப்படுத்தினார்கள். கடவுள் வாழ்த்து என்பது வள்ளுவரால் எழுதப்பட்டதில்லை என்று வ.உ.சி போன்றோர்கள் கூறுகின்றனர். அந்த கடவுள் வாழ்த்து என்று சொல்லப்படக்கூடிய 10 குறள்களில் ஏதாவது ஒரு இடத்தில் கடவுள் என்ற சொல் இருக்கிறதா என்றால் அப்படி எதுவுமில்லை. வாலறிவு என்றால் அது சிறந்த அறிவு என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். திருக்குறளில் கடவுள், மதம், சாதி, கோயில், மோட்சம், ஆத்மா என்று எந்த சொற்களும் கிடையாது. வள்ளுவர் தன்னை எந்த கடவுள் சிந்தாந்தத்துக்குள்ளும் ஒப்படைத்துக் கொண்டவர் அல்ல. பகுத்தறிவு சிந்தனைக்கு வெளிச்சத்துக்கு இடம் கொடுத்தவர்தான் திருவள்ளுவர்.
அதிகாரம் தங்கள் கையில் இருப்பதால் சிலர் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். பிறப்பின் பால் ஆதிக்கம் செலுத்துபவர்கள்தான் இவர்கள் என்று இத்தனை நாள் நாங்கள் கூறியதற்கு மேலும் ஒரு ஆதாரம் கிடைத்துள்ளது. இவர்கள் ஆதிக்க குணம், சாதி எண்ணம், இனவெறி, சமஸ்கிருத சித்தாந்தம் உள்ளிட்டவைகளை கொண்டவர்கள் என்று நாங்கள் சொல்லிவந்த கருத்தை உணராதவர்கள் கூட தற்போது திருவள்ளுவர் மீதே கை வைத்த பிறகு எங்களுடைய கருத்து வலிமை பெரும்; எளிதாக எங்களுடைய பிரச்சாரமும் வெற்றி பெறும்.
திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் தமிழ்நாடு அரசு எடுப்பதாகத் தெரியவில்லை. பாஜகவுடைய தொங்கு சதையாக இங்கிருக்ககூடிய ஆட்சி இருக்கிறது. திருவள்ளுவர் எல்லா சமயத்துக்குமானவர்தான். எனவே அவருக்கு எந்த வண்ணமும் பூசலாம் என்று ஒரு அமைச்சர் கூறுகிறார். ஆனால் அவர்களுடைய கட்சியின் பெயர் அண்ணா. அதில் திராவிடம் என்கிற சொல் இருக்கிறது. அண்ணா என்கிற சொல்லுக்கும் திராவிடம் என்கிற தத்துவத்துக்கும் தற்போதிருக்கும் அதிமுகவுக்கும் துளி சம்பந்தமுமில்லை. அவர்கள் பிஜேபினுடைய அடிவருடியாக இருந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைதான் இது காட்டுகிறது” என்று தெரிவித்தார்.
பாஜகவின் இந்தச் செயல் திருவள்ளுவரை பற்றி மேலோட்டமாக அறிந்தவர்களை அவர் எந்த பின்னணியை சேர்ந்தவர் என்ற கேள்விக்குள் மூழ்கடித்துள்ளது. அதேபோல் அவரை அறியாதவர்கள் அவர் அனைவருக்குமானவர் என்பதை நிலைநிறுத்தவும், அறநெறியை போதிக்கும் அவர் இயற்றிய திருக்குறளை படிக்க வேண்டும் என்ற உணர்வையும் மூட்டியுள்ளது என்றே கூற வேண்டும்.
இதையும் படிங்க: ‘திருவள்ளுவர் யாருக்கும் சொந்தமில்லை; அவர் பொதுவானவர்’ - கமல் ஹாசன்!