பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் அரசு மற்றும் அனைத்து வகை பள்ளிகளிலும் டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு குறித்து மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என கூறியுள்ளார். மேலும் அந்தக் கடிதத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கு சில அறிவுரைகளையும் வழங்கியுள்ளார்.
அவை பின்வருமாறு:
- மாணவர்களை தங்களது கைகளை சுத்தமாகவும், உணவு உண்பதற்கு முன்பு கை கழுவவும் சொல்ல வேண்டும்.
- வகுப்பறைகளை சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைத்திருக்க மாணவர்களிடம் அறிவுறுத்த வேண்டும்.
- வகுப்பறை மற்றும் கழிவறைகளை சுற்றி தண்ணீர் தேங்கி இருந்தால் உடனடியாக அதனை தலைமை ஆசிரியர்களுக்கு மாணவர்கள் தெரிவிக்க வலியுறுத்த வேண்டும்.
- தேங்கிய நீரை அகற்றுவதற்கு தலைமையாசிரியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பள்ளிகளில் குடிநீர் பானைகள் மற்றும் தண்ணீர் தொட்டிகள் மூடி வைக்கப்பட வேண்டும்.
- நல்ல நீர் தேங்குவதால்தான் டெங்கு கொசுக்கள் உருவாகின்றன. கொசுக்கள் பகல் நேரத்தில் கடிப்பதால்தான் டெங்குகாய்ச்சல் உருவாகின்றது என்ற விழிப்புணர்வையும் மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.
- பள்ளிகளில் நடைபெறும் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து தகுந்த அறிவுரைகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
- பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் டெங்கு குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும்.
- சுகாதாரமற்ற குடிநீரால் ஏற்படக்கூடிய நோய்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
- பள்ளிகளில் சுகாதாரம் குறித்தும் பலகைகள் மற்றும் பேனர்கள் வைத்திட வேண்டும்.
- பள்ளிக்கு வந்த பின்பு மாணவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால், ஆசிரியரின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும். அவர்கள் அந்த மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் தெரிவித்த பின்னர் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அல்லது அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
சுகாதாரம் மற்றும் தூய்மையின் முக்கியத்துவத்தை அறிவுரைகளால் மாணவர்களிடம் ஏற்படும் மாற்றம், அவரது பெற்றோர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் எனவும் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.