கோவையில் காந்திபுரத்தில் உள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகம், ஒப்பணக்கார வீதியில் உள்ள தனியார் துணிக்கடை, குனியமுத்தூரில் இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் தியாகு வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் கோவை மாநகர் முழுவதும் பாதுகாப்பு படுத்தப்பட்டுள்ளது. போலீசார் இரவு பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்படி மொத்தமாக 4,000 ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே தமிழ்நாடு சட்ட ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் சம்பவ இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இந்த நிலையில், காலியாக இருந்த கோவை மாநகர உளவுப் பிரிவுக்கும், சிறப்பு உளவுப் பிரிவுக்கும் உதவி ஆணையர்களை புதிதாக நியமித்து இன்று (செப்.24) டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதன்படி, கோவை மாநகர சிறப்பு உளவுப் பிரிவு உதவி ஆணையாராக இருந்து வந்த பார்த்திபன், உளவுப் பிரிவு உதவி ஆணையராகவும், கோவை மாநகர சிங்காநல்லூர் சரக உதவி ஆணையராக இருந்து வந்த அருண், சிறப்பு உளவுப் பிரிவின் உதவி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உளவுப் பிரிவின் உதவி ஆணையர் பொறுப்பை கவனித்து வந்த முருகவேல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரானக் குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுச் சென்ற நிலையில், காலியாக இருந்த உளவுப் பிரிவு உதவி ஆணையர் பொறுப்பிற்கு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: அண்ணா பிறந்தநாள், 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 115 கைதிகள் விடுதலை