தமிழ்நாட்டில் இன்று (மே.31) காலை 6 மணி முதல் ஜூன்7ஆம் தேதி காலை 7 மணி வரை தளர்வுகளற்ற ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்நாடு அரசு சில தளர்வுகளையும் அமல்படுத்தியுள்ளது. அதன்படி, நடமாடும் மளிகைக் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நடமாடும் மளிகைக் கடைகள்
முன்னதாக, அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் நடமாடும் காய்கறிகள், பழங்கள் விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டது. தற்போதைய ஊரடங்கில் மளிகைப் பொருட்களையும், அந்தந்தப் பகுதிகளில் உள்ள மளிகைக் கடை உரிமையாளர்கள் வாகனங்கள், தள்ளுவண்டிகள் மூலம் உள்ளாட்சியின் அனுமதியுடன் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஆன்லைன், தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர்கள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மளிகை, காய்கறி, பழங்களை வாங்கிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
குடும்ப அட்டைகளுக்கு மளிகைப் பொருட்கள்
விரைவில் 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் ஜூன் மாதம் முதல் அமல்படுத்தப்படவுள்ளது.
வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம்
இதுகுறித்து தமிழ்நாடு அரசு, "கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன்படி டோர் டெலிவரி வசதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அனைவரும் அரசின் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம்" என அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திருப்பதி லட்டு டோர் டெலிவரி போலி விளம்பரம்: இணையதளம் மீது வழக்கு பதிவு