இது தொடர்பாக சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர். ரவீந்திரநாத் கூறுகையில், "நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், உலகின் பல நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் உலக நாடுகள் முனைப்புடன் செயல்படுகின்றன. மக்கள் நெருக்கமாகக் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என சர்வதேச பொதுச் சுகாதாரத் துறை நிபுணர்களும், உலக நல நிறுவன நிபுணர்களும் அறிவுறுத்தி உள்ளனர்.
இதைக் கவனத்தில் கொண்டு, நாடு முழுவதும் பொதுமக்களை, அச்ச உணர்வுடன் ஒன்று திரண்டு போராட வைத்துள்ள, குடியுரிமை திருத்தச் சட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு நாட்டில் அமைதியான சூழலையும், பாதுகாப்பு உணர்வையும் அனைத்துப் பகுதி மக்களிடமும் ஏற்படுத்த வேண்டும். இந்தப் பொறுப்பும் கடமையும் மத்திய அரசுக்கு உள்ளது. கொரோனா வைரஸை தடுக்க தீவிர நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.
மருத்துவச் சிகிச்சை வழங்கும் குழுவினருக்குப் பாதுகாப்பு முகக் கவசங்கள், உடைகள் முதலியவை வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கும் பாதுகாப்பு கவசங்கள் குறைந்த விலையில் அரசே வழங்க வேண்டும். கை சுத்தப்படுத்தப் பயன்படும் நுண்ணுயுரி கொல்லி மருத்துவ திரவங்கள், மருந்துகள், கையுறைகள், முகக் கவசங்கள் உள்ளிட்டவற்றின் தட்டுப்பாடு, பதுக்கல், விலையேற்றம் உள்ளிட்டவற்றை போக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.