சென்னை: வெளி கொணர்தல் முறையில் மருத்துவர்களை நியமிப்பதை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் கூறியதாவது;
தமிழ்நாடு அரசு வெளிகொணர்தல் முறையில் 450 மருத்துவர்களை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நியமிக்கவுள்ளது. அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அவர்களுக்கு மாதம் ரூ.40 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும். மூன்று மாதங்களுக்கு மட்டுமே இந்த பணி வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. அரசின் இப்பணி நியமனம் கடும் கண்டனத்திற்குரியது.
2005ஆம் ஆண்டு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2500 மருத்துவர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமித்தார். அவர்களுக்கு வெறும் 8000 ரூபாய் மட்டுமே மாதாந்திர தொகுப்பூதியமாக வழங்கப்பட்டது. அம்மருத்துவர்கள் பணி நிரந்தரம் தொடர்பாக பல்வேறு போராட்டங்களைத் தொடர்ச்சியாக நடத்தினர்.
அப்போராட்டங்களின் காரணமாக ஜெயலலிதா, 2006ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அளித்த தேர்தல் வாக்குறுதியில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவந்த மருத்துவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர், இனி மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப் படமாட்டார்கள் என்று கூறினார். அதை நாங்கள் முழுமனதுடன் வரவேற்றோம்.
இதேபோல் திமுகவும் வாக்குறுதி அளித்திருந்தது. திமுக அதன் ஆட்சிக் காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்களை நியமிக்காமல் தனது வாக்குறுதியை காப்பாற்றியது. ஆனால் அதிமுக அரசு மருத்துவர்களை வெளிகொணர்தல், ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக நியமிப்பது என்பது ஜெயலலிதா அளித்த வாக்குறுதிக்கு எதிரானது.
`தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்’ என்ற அமைப்பு இருக்கும் போது, மருத்துவர்களை, மருத்துவ ஊழியர்களை விரைவாக பணி நியமனம் செய்வதற்காகவே ‘மருத்துவப் பணியாளர் பணிநியமன ஆணையம்’ (எம்ஆர்பி) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்தியாவிலேயே முதன் முறையாக இப்படி ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. இதை மாபெரும் சாதனையாகவும அதிமுக அரசு கூறிக்கொள்கிறது.
அதோடு நில்லாமல், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என கோரி போராடிய மருத்துவர்களை பழிவாங்கும் நோக்குடன் இடமாறுதல் செய்தது தமிழ்நாடு அரசு.
பின்னர், மருத்துவர்கள் பற்றாக்குறை என்ற காரணத்தைக் காட்டி, அதே அரசு கௌரவ அடிப்படையில் மருத்துவர்களை நியமிக்க முயன்றது. கடும் எதிர்ப்பின் காரணமாக அதை கைவிட்டது. தற்பொழுது வெளி கொணர்தல் முறையில் மருத்துவர்களை நியமிக்க முயல்கிறது. இது கண்டிக்கத்தக்கது. இம்முடிவை உடனடியாக கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.