மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க, நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளான தீபா மற்றும் தீபக்கை சட்டப்பூர்வ வாரிசுகளாக அறிவித்து, 190 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை நிர்வகிக்கும் உரிமையையும் வழங்கியது. அத்துடன், அவர்களின் சொந்த செலவில் காவல்துறை பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எம்.எஸ்.ரமேஷ் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அரசு சார்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் பாப்பையா, ” தீபா, தீபக்கிற்கு பாதுகாப்பளிக்க காவல்துறை தயாராக உள்ளது. அதற்கான முன்பணமாக இருவரும் சேர்ந்து 6 மாதத்திற்கு 20 லட்சத்து 83 ஆயிரத்தை செலுத்துமாறு காவல்துறை ஆணையர் சார்பில் இரண்டு மாதங்களுக்கு முன்பே கடிதம் அனுப்பியும் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை ” எனத் தெரிவித்தார்.
தீபக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காவல்துறை கடிதத்துக்கு பதிலளிக்க இருப்பதாக தெரிவித்த நிலையில், தீபா தரப்பு வழக்கறிஞர், தனக்கு அரசின் காவல்துறை பாதுகாப்பு வேண்டாமெனவும், தனியார் பாதுகாப்பை அமர்த்தி கொள்வதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: காவல்துறையை கண்டிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்